தேர்வறையை விட்டு மாணவர்கள் வெளிநடப்பு: பருவத் தேர்வில் ஆங்கிலத்தில் மட்டுமே வினாத்தாள் வழங்கப்படும் ஆண்டிப்பட்டி கல்லூரி முதல்வர் தகவல்
ஆண்டிப்பட்டி காமராஜர் பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரி பருவத் தேர்வில் வினாத்தாள் ஆங்கிலத்தில் இருந்ததால், மாணவர்கள் தேர்வறையை விட்டு வெளிநடப்பு செய்தனர். இதனிடையே பருவத்தேர்வு வினாத்தாள் இனி ஆங்கிலத்தில் மட்டுமே வழங்கப்படும் என்று கல்லூரி முதல்வர் தெரிவித்து உள்ளார்.
ஆண்டிப்பட்டி,
ஆண்டிப்பட்டியில் மதுரை காமராஜர் பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரி கடந்த 2002-ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. இங்கு, 700 மாணவிகள், 600 மாணவர்கள் என மொத்தம் 1,300 பேர் இளநிலை பொருளாதாரம், இயற்பியல், கணிதவியல், பி.காம் (சிஏ), உள்ளிட்ட பிரிவுகளில் பயின்று வருகின்றனர்.
இங்கு, தற்போது பருவத் தேர்வுகள் நடைபெற்று வருகின்றன. தேர்வுக்கான வினாத்தாள் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் வழங்கப்பட்டு, மாணவர்கள் தேர்வை தமிழில் எழுதுவது வழக்கமாக இருந்து வந்தது. இந்தநிலையில், நுண்ணிய பொருளாதாரம் மற்றும் புள்ளியியல் தேர்வுகள் நடைபெற்றன. இந்த இரு தேர்வுகளின் வினாத்தாள்கள் ஆங்கிலத்தில் இருந்தன. இதனால், மாணவர்கள் குழப்பமடைந்தனர். எனவே மாணவர்கள் தேர்வறையை விட்டு அரை மணி நேரத்திலேயே வெளிநடப்பு செய்தனர்.
இதையடுத்து, பின்தங்கிய கிராமப்புற பகுதிகளில் உள்ள அரசுப் பள்ளிகளில் தமிழ்வழியில் பயின்று, கல்லூரிக்கு வரும் தங்களுக்கு வழக்கம்போல தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் வினாத்தாள்கள் வழங்க வேண்டும் என, மதுரை காமராஜர் பல்கலைக்கழக நிர்வாகத்துக்கு மாணவர்கள் வேண்டுகோள் விடுத்தனர். மேலும், இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்காவிட்டால், நிர்வாகத்தை கண்டித்து இந்திய மாணவர் சங்கம் சார்பில் போராட்டம் நடத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
இது குறித்து கல்லூரி முதல்வர் சுரேஷ் கூறும்போது, காமராஜர் பல்கலைக்கழகத்தின் சார்பில், ஆங்கிலவழிக் கல்வி பயிலும் மாணவர்களுக்கு எளிதாக புரியும் வகையில் முன்பு தமிழ், ஆங்கிலம் என இரு மொழிகளிலும் வினாத்தாள் கள் தயாரிக்கப்பட்டன. ஆனால், இனிவரும் காலங் களில் வினாத்தாள்கள் ஆங்கிலத்தில் மட்டுமே வழங்கப்படும் என பல்கலைக் கழகம் தெரிவித்துள்ளதாக கூறினார்.