மாவட்டத்தில் தென்னை மரங்களில் ‘நீரா’ பானம் எடுக்க அனுமதி
தேனி மாவட்டத்தில் தென்னை மரங்களில் இருந்து ‘நீரா’ பானம் எடுக்க அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.
தேனி,
தென்னை விவசாயிகளின் பொருளாதார நிலையை மேம்படுத்த தென்னை மரங்களில் உள்ள விரியாத பாளைகளில் இருந்து ‘நீரா’ பானம் எடுக்க தமிழகத்தில் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. முதற் கட்டமாக பொள்ளாச்சி, ஈரோடு, புதுக்கோட்டை மாவட்டங்களில் அனுமதி அளிக்கப்பட்டது. 2-வது கட்டமாக திருப்பூர் மாவட்டத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டது.
தற்போது தேனி மாவட்டத்தில் தேனி தென்னை உற்பத்தியாளர் நிறுவனத்தின் மூலம் ‘நீரா’ பானம் எடுக்க மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ் அனுமதி அளித்துள்ளார். தேனி தென்னை உற்பத்தியாளர் நிறுவனம் 1,000 தென்னை விவசாயிகளை பங்குதாரர் களாக கொண்டு தேனி, பெரியகுளம், ஆண்டிப்பட்டி ஆகிய 3 தாலுகாக்களை உள்ளடக் கியதாக செயல்படுகிறது.
அந்த வகையில் தேனி தாலுகாவில் 38 விவசாயிகளுக்கு 1,330 மரங்களிலும், ஆண்டிப்பட்டி தாலுகாவில் 88 விவசாயிகளுக்கு 3,115 மரங்களிலும், பெரியகுளம் தாலுகாவில் 19 விவசாயிகளுக்கு 665 மரங்களிலும் ‘நீரா‘ பானம் எடுக்க அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. அந்த வகையில் மொத்தம் 145 விவசாயிகளுக்கு 5,110 மரங்களில் ‘நீரா’ பானம் எடுக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
‘நீரா’ பானம் எடுக்கும் அனைத்து மரங்களுக்கும் இயற்கை உரங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று அறிவுரை வழங்கப்பட்டு உள்ளது. தென்னை விவசாயிகளுக்கு இதன் மூலம் ஒரு மரம் மூலம் மாதம் ரூ.1,500 கிடைக் கும். ஒவ்வொரு விவசாயிகளுக்கும் 30-ல் இருந்து 35 மரங்கள் வரை அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. அந்த வகையில் மாதம் ஒவ்வொரு விவசாயிக்கும் சுமார் ரூ.50 ஆயிரம் வரை வருவாய் கிடைக்கும்.
இத்தகவல்கள் தேனி தென்னை உற்பத்தியாளர் நிறுவன தலைவர் பன்னீர்செல்வம் மற்றும் நிர்வாகிகள் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மேலும் இதுகுறித்து தேனி கலால் துறை அதிகாரி ஒருவரிடம் கேட்ட போது, ‘மாவட்டத்தில் ‘நீரா’ பானம் எடுக்க அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. முறையான ஆய்வுகள் மேற்கொண்டு இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தென்னை விவசாயிகள் பங்குதாரர்களாக சேர்ந்து தொடங்கிய நிறுவனம் முறையாக பதிவு செய்யப்பட வேண்டும். பதிவு செய்யப்பட்ட நிறுவனம் மூலம் முறையாக விண்ணப்பம் அளித்து அனுமதி பெற வேண்டும். குறிப்பிட்ட அளவில் மட்டுமே அனுமதி கொடுக்கப்படுகிறது. ஒரு விவசாயிக்கு 5 சதவீதம் மரங்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. இதை சந்தைப்படுத்துவது அந்தந்த நிறுவனம் மூலமாகவே நடக்கும். நீரா பானம் எடுக்கும் மரங்களுக்கு பெயிண்ட் அடித்து அடையாளம் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் ஆய்வுகள் நடத்துவதற்கு எளிதாய் இருக்கும்’ என்றார்.