மார்த்தாண்டத்தில் ஓய்வு பெற்ற சப்–இன்ஸ்பெக்டரை கொன்றவர் கைது

மார்த்தாண்டத்தில் ஆலய வளாகத்தில் புகுந்து ஓய்வு பெற்ற சப்–இன்ஸ்பெக்டரை தாக்கி கொன்றவரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2018-12-01 23:00 GMT
குழித்துறை,


மார்த்தாண்டம் அருகே பரக்குன்று என்ற இடத்தை சேர்ந்தவர் சுந்தர்ராஜ் (வயது 63). இவர் போலீஸ் சிறப்பு சப்–இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். ஓய்வுக்கு பிறகு மார்த்தாண்டம் சி.எஸ்.ஐ. ஆலயத்தில் காவலாளியாக வேலை செய்து வந்தார்.

சம்பவத்தன்று இரவு, அவர் ஆலயத்தில் பணியில் இருந்தார். அப்போது ஒரு நபர் ஆலய வளாகத்திற்குள் புகுந்து சுந்தர்ராஜை கம்பால் தாக்கி விட்டு தப்பி சென்றார். இதில் படுகாயம் அடைந்த சுந்தர்ராஜ் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி சுந்தர்ராஜ் பரிதாபமாக இறந்தார்.


இதுதொடர்பாக மார்த்தாண்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அந்த பகுதியில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்த காட்சிகளை போலீசார் கைப்பற்றி ஆய்வு செய்தனர்.

அதில் சுந்தர்ராஜை தாக்கிய நபரின் உருவம் பதிவாகி இருந்தது. அந்த காட்சியை அடிப்படையாக கொண்டு நபரை போலீசார் தேடினர்.


இந்தநிலையில், திருவட்டார் அருகே ஆனையடி பகுதியில் உள்ள ஒரு கிறிஸ்தவ ஆலயத்தில் ஒருவர் புகுந்து இயேசு சொரூபத்தை உடைத்து சூறையாடினார். இதுதொடர்பாக திருவட்டார் போலீசார் நடத்திய விசாரணை நடத்தி ஆனையடி மாத்தார் பகுதியை சேர்ந்த ரவி (40) என்பவரை கைது செய்தனர்.

இவருக்கு திருமணமாகி மனைவி பிரிந்து சென்றார். திருவட்டார் பகுதியில் ஏற்கனவே நடந்த ஒரு சிலை உடைப்பு வழக்கில் ரவி கைதாகி ஜெயிலில் இருந்துள்ளார். ஜெயிலில் இருந்து விடுதலையாகி வெளியே வந்த பின்பு, இரவு நேரங்களில் மனநலம் பாதிக்கப்பட்டவர் போல் சுற்றி திரிந்துள்ளார்.

சம்பவத்தன்று இரவு மார்த்தாண்டம் ஆலயத்துக்குள் புகுந்து அங்கு பணியில் இருந்த ஓய்வு பெற்ற சப்–இன்ஸ்பெக்டர் சுந்தர்ராஜை அடித்து கொலை செய்தது தெரிய வந்தது. மேலும், கண்காணிப்பு கேமராவில் பதிவான உருவம் ரவிதான் என்பதை போலீசார் உறுதி செய்தனர்.

பின்னர், ரவி மார்த்தாண்டம் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டார். இதையடுத்து சுந்தர்ராஜ் கொல்லப்பட்ட வழக்கிலும் ரவி கைது செய்யப்பட்டார். அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்