கயத்தாறு அருகே ஆட்டோவை அடித்து நொறுக்கிய தொழிலாளிக்கு 7 ஆண்டு சிறை தூத்துக்குடி கோர்ட்டு தீர்ப்பு
கயத்தாறு அருகே ஆட்டோவை அடித்து நொறுக்கிய தொழிலாளிக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதித்து தூத்துக்குடி கோர்ட்டு தீர்ப்பு கூறியது.
தூத்துக்குடி,
கயத்தாறு அருகே ஆட்டோவை அடித்து நொறுக்கிய தொழிலாளிக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதித்து தூத்துக்குடி கோர்ட்டு தீர்ப்பு கூறியது.
தொழிலாளி
தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே உள்ள ராஜாபுதுக்குடி மெயின் ரோட்டை சேர்ந்தவர் பால்தங்கசாமி. இவருடைய மகன் ராஜா (வயது 26). இவர் சொந்தமாக ஆட்டோ வைத்து தொழில் செய்து வந்தார். கடந்த 7.6.2015 அன்று அந்த பகுதியில் கோவில் திருவிழா நடந்தது. அப்போது அதே பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளி செந்தூர்பாண்டி மகன் செந்தில்குமார் (28) என்பவருக்கும், ராஜாவிற்கும் திடீரென வாக்குவாதம் ஏற்பட்டது.
இதில் ஆத்திரம் அடைந்த செந்தில்குமார் ராஜாவின் ஆட்டோ மற்றும் வீட்டு கண்ணாடியை அடித்து நொறுக்கினார். இதுகுறித்து கயத்தாறு போலீசார் வழக்குப்பதிவு செய்து செந்தில்குமாரை கைது செய்தனர். இதுதொடர்பான வழக்கு தூத்துக்குடி 2–வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி கவுதமன் முன்னிலையில் நடந்து வந்தது.
7 ஆண்டு சிறை
இந்த வழக்கில் விசாரணை முடிந்து நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. குற்றம் சாட்டப்பட்ட செந்தில்குமாருக்கு 7 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.1,000 அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பு கூறினார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் கோமதி மணிகண்டன் ஆஜரானார்.