ஆரணியில், மக்கும் குப்பையில் இருந்து உரம் தயாரிக்க ரூ.2½ கோடியில் 5 மையங்கள்: அமைச்சர் பார்வையிட்டு ஆய்வு

ஆரணியில் மக்கும் குப்பையில் இருந்து உரம் தயாரிக்க ரூ.2½ கோடியில் 5 இடங்களில் மையம் அமைக்கப்பட்டுள்ளதை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

Update: 2018-12-01 23:00 GMT

ஆரணி,

ஆரணி நகராட்சியில் 33 வார்டுகள் உள்ளன. இங்கு நாள் ஒன்றுக்கு 27 டன் குப்பைகள் சேகரிக்கப்படுகின்றன. இதனை மக்கும் குப்பை, மக்காத குப்பை என பிரிக்கப்பட்டு மக்கும் குப்பையிலிருந்து உரம் தயாரிக்க முடிவு செய்யப்பட்டது. இதற்காக ரூ.2½ கோடி மதிப்பீட்டில் ஆரணி நகராட்சி வளாகம், ஆரணி– சேவூர் பைபாஸ் சாலையில் நகராட்சி குடிநீர் நீரேற்றும் நிலையம் அருகில், புத்திரகாமேட்டீஸ்வரர் கோவில் அருகில் நவீன எரிவாயு தகனமேடை வளாக பகுதி மற்றும் மாட்டு தொட்டி அருகில் 2 இடங்கள் என மொத்தம் 5 இடங்களில் கட்டிடம் கட்டப்பட்டுள்ளது.

அங்கு உரம் தயாரிப்பதற்கான எந்திரங்களும் நிறுவப்பட்டு அதனை திறப்பதற்கான பணிகள் நடந்து வருகின்றன. இந்த நிலையில் நேற்று தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் அந்த மையங்களை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இது குறித்து நகராட்சி நிர்வாக மண்டல இயக்குனர் டாக்டர் விஜயகுமார் கூறுகையில், ‘‘ஆரணி நகரில் அமைக்கப்பட்டுள்ள 5 குப்பை சேகரிக்கும் மையங்களை வரும் 7–ந் தேதி கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி தலைமையில் அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் திறந்து வைக்க உள்ளார்.

இங்கு பொதுமக்களால் பிரித்து வழங்கப்படுகிற மக்கும், மக்கா குப்பைகளால் நுண்ணுயிர் உரங்கள் தயாரித்து பொதுமக்களுக்கும், தோட்டப்பயிர்காரர்களுக்கும் வழங்கப்பட உள்ளது. மேலும் சுழற்சி முறையில் சேகரிக்கப்படுகிற குப்பைகளை அரியலூர் மாவட்டத்தில் உள்ள சிமெண்ட்’ நிறுவனத்திற்கு அனுப்புவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது’’ என்று தெரிவித்தார்.

நிகழ்ச்சியில் நகராட்சி ஆணையாளர் கே.அசோக்குமார், பொறியாளர் கணேசன், மேலாளர் நெடுமாறன், உதவி பொறியாளர் தேவநாதன், கூட்டுறவு சங்கத் தலைவர்கள் ஜி.வி.கஜேந்திரன், பாரி பி.பாபு, எம்.வேலு, முன்னாள் நகரமன்ற உறுப்பினர் ஜி.பாஸ்கரன் உள்படபலர் இருந்தனர்.

மேலும் செய்திகள்