எட்டயபுரம் அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதல்; 4 பேர் படுகாயம்
எட்டயபுரம் அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதிக்கொண்ட விபத்தில் 4 பேர் படுகாயம் அடைந்தனர்.
எட்டயபுரம்,
எட்டயபுரம் அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதிக்கொண்ட விபத்தில் 4 பேர் படுகாயம் அடைந்தனர்.
மோட்டார் சைக்கிள்கள் மோதல்
எட்டயபுரம் அருகே இளம்புவனத்தைச் சேர்ந்தவர்கள் பாலமுருகன் (வயது 31), மாயகண்ணன் (40), கணேசன் (33). நண்பர்களான இவர்கள் 3 பேரும் சாலை அமைக்கும் தொழிலாளர்கள். இவர்கள் 3 பேரும் நேற்று காலையில் எட்டயபுரம் ஆட்டு சந்தைக்கு சென்றனர். பின்னர் அவர்கள் அங்கிருந்து ஒரு மோட்டார் சைக்கிளில் திரும்பி சென்று கொண்டிருந்தனர். பாலமுருகன் மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்றார்.
இளம்புவனம் வேகத்தடையில் சென்றபோது, முன்னால் சென்ற தனியார் பள்ளிக்கூட பஸ்சை இடதுபுறமாக பாலமுருகன் முந்தி செல்ல முயன்றார். அப்போது அங்குள்ள தெருவில் இருந்து இறைச்சி கடைக்காரரான முத்து மாரியப்பன் (34) மோட்டார் சைக்கிளில் வந்தார். எதிர்பாராதவிதமாக 2 மோட்டார் சைக்கிள்களும் மோதிக் கொண்டன.
4 பேர் படுகாயம்
இந்த விபத்தில் சாலையில் தூக்கி வீசப்பட்ட பாலமுருகன், மாயகண்ணன், கணேசன், முத்து மாரியப்பன் ஆகிய 4 பேரும் படுகாயம் அடைந்தனர். உடனே அவர்களை எட்டயபுரம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்து சிகிச்சை அளித்தனர். பலத்த காயம் அடைந்த மாயகண்ணனை மேல் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இதுகுறித்த புகாரின்பேரில், எட்டயபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, பஸ் டிரைவரான கோவில்பட்டி வடக்கு திட்டங்குளத்தைச் சேர்ந்த செல்லப்பாவிடம் (50) விசாரித்து வருகின்றனர். பஸ்சின் முன்னால் மோட்டார் சைக்கிள்கள் மோதிக் கொண்டதும், செல்லப்பா உடனே பஸ்சை நிறுத்தியதால் பெரும் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.