மிக்கி மவுஸ் படம் ரூ. 1 கோடிக்கு ஏலம்
உலகப் புகழ்பெற்ற கார்ட்டூன் கதாபாத்திரமான மிக்கி மவுசின் போஸ்டர்கள் சுமார் 1 கோடி ரூபாய்க்கு ஏலம் விடப்பட்டிருக்கின்றன.;
கார்ட்டூன் பிரியர்களின் மனம் கவர்ந்த மிக்கி மவுசின் 90-வது ‘பிறந்தநாள்’ சமீபத்தில் கொண்டாடப்பட்டது. வால்ட் டிஸ்னி உருவாக்கிய மிக்கி மவுஸ், அமெரிக்காவின் பொழுதுபோக்கு வணிக நிறுவனமான வால்ட் டிஸ்னியின் அதிகாரப்பூர்வ சின்னமாகும்.
1930-ம் ஆண்டில், ஸ்டீம்போட் வில்லி என்ற சிறுபடத்தில் முதல்முறையாக அறிமுகப்படுத்தப்பட்ட மிக்கி மவுஸ், பிற்காலத்தில் மிகவும் பிரபலமானது.
இந்நிலையில், மிக்கி மவுசின் 90-வது பிறந்தநாளை முன்னிட்டு அதன் அரிய போஸ்டர்கள் ஏலத்தில் விடப்பட்டன. உலக அளவில் பிரபலமாகி பல கோடி பேரை சிரிக்க வைத்து ரசிக்க வைத்த மிக்கி மவுசின் 7 அரிய போஸ்டர்கள் லண்டனில் ஏலம் விடப்பட்டன. ஆன்லைன் மூலம் நடைபெற்ற இந்த ஏலத்தில் இந்திய மதிப்பில் ரூ. 1 கோடியே 18 லட்சம் கிடைத்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இதற்கிடையில், மிக்கி மவுசின் பிறந்தநாளையொட்டி, டிஸ்னி நிறுவனம் சார்பில் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் ஒரு சிறப்புக் கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மிக்கி மவுசின் புகைப்படங்கள், திரைப்படங்கள், அது உருவான விதம் எனப் பலவும் இந்தக் கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இந்தக் கண்காட்சி, அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் வரை நடைபெறும் என டிஸ்னி நிறுவனம் அறிவித்துள்ளது.