உழவரகங்கள் மூலமே விவசாயிகளுக்கான பொருட்களை வழங்கவேண்டும் - ஏ.ஐ.டி.யு.சி. வலியுறுத்தல்

உழவரகங்கள் மூலமே விவசாயிகளுக்கு தேவையான பொருட்களை வழங்கவேண்டும் என்று ஏ.ஐ.டி.யு.சி. தொழிற்சங்கம் வலியுறுத்தி உள்ளது.

Update: 2018-11-30 23:55 GMT

புதுச்சேரி,

ஏ.ஐ.டி.யு.சி. தொழிற் சங்கத்தின் புதுவை மாநில பொதுச்செயலாளர் சேதுசெல்வம் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–

புதுச்சேரி அரசின் சார்பில் பாசிக் நிறுவனம் கடந்த 1986–ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த நிறுவனம் தொடங்கப்பட்டதன் நோக்கம் விவசாயிகளுக்கு நேரிடையாக சேவை செய்ய வேண்டும் என்பதுதான். இந்த நிறுவனம் நடத்தக்கூடிய உழவரகங்கள் மூலம் விவசாயிகளுக்கு தேவையான விதை, உரம், பூச்சி மருந்து மற்றும் வேளாண் கருவிகள் அரசு வழங்கும் மானிய விலையில் இதுநாள்வரை விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

பாசிக் நிறுவனத்தால் நடத்தக்கூடிய உழவரகங்கள் புதுவை, காரைக்கால், மாகி மற்றும் ஏனாம் ஆகிய பகுதிகளில் மொத்தம் 37 இயங்கி வருகிறது. இதில் சுமார் 120–க்கும் மேற்பட்ட ஊழியர்கள் வேலை செய்து வருகிறார்கள். இந்தநிலையில் வேளாண் துறை இயக்குனர், விவசாயிகளுக்கு மானியத்தில் வழங்கக்கூடிய விதைகளுக்கு பதிலாக மானியத்தொகை வங்கிக்கணக்கில் நேரடியாக செலுத்தப்படும் எனவும், விவசாயிகள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கடைகளில் தங்களுக்கு விரும்பும் இடத்தில் விதைகளை வாங்கிக்கொள்ளலாம் என அறிக்கையின் மூலம் குறிப்பிட்டுள்ளார்.

இதனால் விவசாயிகளுக்கு பல வகைகளில் சிரமம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. குறிப்பாக விவசாயிகள் தாங்கள் வாங்கும் விதை பொருட்களை முழு பணத்தையும் செலுத்தி வாங்க வேண்டிய நிலை ஏற்படும். மேலும் எந்த நோக்கத்திற்காக பாசிக் நிறுவனம் தொடங்கப்பட்டதோ அந்த நோக்கத்தை நாசப்படுத்தும் செயலாகும். அதுமட்டுமின்றி இந்த உழவரகங்களில் வேலை செய்வதற்காக நியமிக்கப்பட்ட தொழிலாளர்களின் வேலையை பறிக்கக்கூடிய நிலை ஏற்படும்.

எனவே வேளாண்துறையின் இத்தகைய செயலை வன்மையாக கண்டிக்கிறோம். தற்போது நடைமுறையில் உள்ளதுபோல் பாசிக் உழவரகங்கள் மூலம் தொடர்ந்து விவசாயிகளுக்கு தேவையான பொருட்களை விற்பனை செய்வதற்கு புதுவை அரசு நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொள்கிறோம்.

இவ்வாறு அந்த அறிக்கையில் சேதுசெல்வம் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்