புதுக்கோட்டை மாவட்டத்தில் புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கமல்ஹாசன் நிவாரண பொருட்கள் வழங்கினார்

புதுக்கோட்டை மாவட்டத்தில் புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கமல்ஹாசன் நிவாரண பொருட்கள் வழங்கினார்.

Update: 2018-11-30 23:29 GMT
கந்தர்வகோட்டை,

கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் நேரில் சென்று நிவாரண பொருட்களை வழங்கி வருகிறார்கள். மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் கடந்த 21-ந்தேதி தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்டங்களுக்கு சென்று நிவாரண பொருட்கள் வழங்கினார்.

இந்நிலையில் நேற்று அவர் புதுக்கோட்டை மாவட்டத்தில் புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கினார். அவர் திருச்சியில் இருந்து செங்கிப்பட்டி வழியாக கந்தர்வகோட்டை அருகே உள்ள அக்கச்சிப்பட்டி கிராமத்திற்கு வந்தார். கஜா புயலால் பாதிக்கப்பட்ட அப்பகுதி மக்களை சந்தித்து ஆறுதல் கூறி அரிசி, பருப்பு, போர்வை, சேலை உள்ளிட்ட 9 பொருட்கள் அடங்கிய பாக்கெட்களை வழங்கினார்.

350 மாற்றுத்திறனாளிகள் உள்பட 700 பேருக்கு நிவாரண பொருட்களை வழங்கினார். அப்போது கட்சியின் பொறுப்பாளர்கள் மூர்த்தி, சுரேஷ் ஆகியோர் உடன் இருந்தனர்.

கந்தர்வகோட்டை அருகே உள்ள அக்கச்சிப்பட்டியில் காலை 8 மணிக்கு, நிவாரண பொருட்கள் வழங்கப்படும் என்று மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் அறிவிக்கப்பட்டு இருந்தது. இதற்காக காலை 8 மணியிலிருந்து கந்தர்வகோட்டை இந்திராநகர், குமரன்காலனி, அக்கச்சிப்பட்டி பொதுமக்கள் சாலையில் கூட்டமாக திரண்டிருந்தனர். ஆனால் கமல்ஹாசன் 12 மணிக்கு தான் வந்தார். மேலும் அறிவிக்கப்பட்ட நிவாரணம் போதாததால் பொதுமக்கள் தள்ளு-முள்ளுவில் ஈடுபட்டனர். சிலர் நிவாரணம் கிடைக்காததால் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

தொடர்ந்து கமல்ஹாசன் அக்கச்சிப்பட்டியில் இருந்து கறம்பக்குடி அருகே உள்ள பந்துவாக்கோட்டைக்கு காரில் சென்றார். அப்போது அந்த பகுதியில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளி வளாகத்தில் மேடை அமைத்து, மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் பொதுமக்களுக்கு நலதிட்ட உதவிகள் வழங்க கட்சியினர் ஏற்பாடு செய்து இருந்தனர்.

ஆனால் கமல்ஹாசன் பள்ளிக்குள் அரசியல்வாதிகள் நுழைந்து, மாணவர்கள் படிப்பை தொந்தரவு செய்யக்கூடாது எனக்கூறி பள்ளி வளாகத்திற்குள் நுழைய மறுத்து, சாலையில் நின்ற தனது, காரில் ஏறி நின்று பொதுமக்களிடம் குறைகளை கேட்டு சில நிமிடம் பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

எங்களால் இயன்ற உதவிகளை மக்கள் நீதி மய்யத்தின் பொறுப்பாளர்கள் வழங்குவார்கள். இங்கு உள்ள பாதிப்புகளை அரசிடம் எடுத்து சொல்லுவோம். அதிகாரிகள் வந்து பார்க்கவில்லை என பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். தனி மனிதர்கள் யாரும் இவ்வளவு இழப்பீடுகளை ஈடுகட்ட முடியாது. அரசுகள் தான் நிவாரண உதவிகளை செய்ய வேண்டும்.

புயல் பாதிப்பை தமிழக அரசு மற்றும் அதிகாரிகள் கவனத்துக்கு கொண்டு செல்ல வேண்டியது எங்கள் கடமை. பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு தங்க இடம் கொடுத்த பள்ளிக்கும், உணவு அளித்த ஆசிரியர்களுக்கும் நன்றி தெரிவித்து கொள்கிறேன். தொடர்ந்து எங்களால் முயன்ற உதவிகளை செய்வோம். படிக்கின்ற மாணவர்களை தொந்தரவு செய்யக்கூடாது என்ற நோக்கத்தில் தான் பள்ளிக்குள் வராமல் இங்கு பேசுகிறேன்.

இவ்வாறு அவர் பேசினார். அதன் பின்னர் கமல்ஹாசன் தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டைக்கு புறப்பட்டு சென்றார்.

மேலும் செய்திகள்