கல்வி, சுகாதாரம் செயல்பாடு தரவரிசை பட்டியலில் ராமநாதபுரம் 3–வது இடம்; கலெக்டர் தகவல்

கல்வி,சுகாதாரம் செயல்பாடு தரவரிசை பட்டியலில் ராமநாதபுரம் 3–வது இடத்தில் உள்ளது என்று கலெக்டர் வீரராகவ ராவ் தெரிவித்துள்ளார்.

Update: 2018-11-30 23:05 GMT

ராமநாதபுரம்,

மத்திய அரசின் தகவல் தொடர்பு துறையின் கீழ் உள்ள பத்திரிகை தகவல் மையத்தின் சார்பில் மத்திய அரசின் திட்டங்கள் குறித்த விளக்க கூட்டம் ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் வீரராகவராவ் தலைமை தாங்கினார். புதுடெல்லியில் உள்ள மத்திய பத்திரிகை தகவல் மைய கூடுதல் இயக்குனர் அதுல்திவாரி முன்னிலை வகித்து மத்திய அரசின் தற்போதைய திட்டங்கள் குறித்து விளக்கி கூறினார். சென்னை கூடுதல் இயக்குனர் மாரியப்பன் வரவேற்று பேசினார்.

நிகழ்ச்சியில் கலெக்டர் வீரராகவ ராவ் பேசியதாவது:– மத்திய அரசு பல்வேறு மக்கள் நல திட்டங்களை நிறைவேற்றி வருகிறது. இந்த திட்டங்கள் தமிழகத்தில் முதல்–அமைச்சர் உத்தரவின்படி சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகின்றன. குறிப்பாக தூய்மை பாரத இயக்க திட்டம் ராமநாதபுரம் மாவட்டத்தில் 429 ஊராட்சிகளிலும் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு உள்ளது. தனிநபர் கழிப்பறை திட்டம் நிறைவேற்றப்பட்டு திறந்தவெளி கழிப்பறை இல்லாத மாவட்டமாக மாறி உள்ளது. மேலும் பிரதமரின் பயிர்காப்பீடு திட்டத்தின்கீழ் அதிகஅளவாக கடந்த 2016–17–ம் ஆண்டில் ரூ.528 கோடி காப்பீடு தொகை வழங்கப்பட்டு உள்ளது.

கடந்த ஆண்டு 1½ லட்சம் விவசாயிகள் பயிர்காப்பீடு செய்து அவர்களுக்கான தொகை விரைவில் வழங்கப்பட உள்ளது. இந்த ஆண்டு இதுவரை 1 லட்சம் பேர் வரை காப்பீடு தொகை செலுத்தி வருகின்றனர்.

வேளாண்மைதுறை, தோட்டக்கலைத்துறை சார்பில் சொட்டுநீர் பாசனம் மானியத்துடன் மேற்கொள்ளும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. பிரதமரின் முத்தான திட்டங்களின் ஒன்றாக முத்ரா திட்டத்தின் கீழ் கடந்த ஆண்டு ரூ.265 கோடி கடன் வழங்கப்பட்டுஉள்ளது. இந்த ஆண்டு இதுவரை ரூ.150 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது.

வளர்ந்துவரும் முன்னோக்கிய மாவட்டங்களின் பட்டியலில் உள்ள ராமநாதபுரம் மாவட்டத்தில் மருத்துவம், கல்வி, சுகாதாரம் உள்ளிட்டவை வளர்ச்சியடைய செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த செயல்பாட்டின் அடிப்படையில் தரவரிசை வழங்கப்பட்டு வரும் நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் வரையிலான காலகட்டத்தில் ராமநாதபுரம் மாவட்டம் இந்தியாவிலேயே 3–வது இடத்தில் உள்ளது. ஆண்டுக்கு 70 லட்சம் சுற்றுலா பயணிகள் வரும் ராமநாதபுரம் மாவட்டத்தில் மத்திய அரசின் சார்பில் பல்வேறு சுற்றுலா மேம்பாட்டு திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன.

இவ்வாறு அவர் பேசினார்.

மேலும் செய்திகள்