நிதி நிறுவனம் நடத்தி ரூ.1500 கோடி மோசடி: மத்திய பிரதேசத்தை சேர்ந்தவர்கள் மீது சி.பி.ஐ. வழக்குப்பதிவு

மதுரை ஐகோர்ட்டு உத்தரவை தொடர்ந்து, ரூ.1500 கோடி மோசடி செய்த நிதி நிறுவனத்தை நடத்திய மத்திய பிரதேசத்தை சேர்ந்தவர்கள் மீது சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்துள்ளது.

Update: 2018-11-30 22:47 GMT

மதுரை,

மத்திய பிரதேச மாநிலம், குவாலியரைச் சேர்ந்தவர்கள் பசந்த் லால் ‌ஷர்மா, ராகேஷ் சிங் நர்வாரியா, அகி பரன்சிங், சந்திராப் பன் யாதவ், நீரஜ் சிங், பானு பிரதாப் சிங். இவர்கள் மதுரையில் பரிவார் டைரிஸ் அன்ட் அலைடு லிமிடெட் என்ற நிதி நிறுவனத்தை தொடங்கினர். அதிக வட்டி தருவதாகக் கூறி பொதுமக்களிடம் பணம் வசூலித்தனர். மதுரை மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த சுமார் 1½ லட்சம் பேர் இந்த நிதி நிறுவனத்தில் தங்கள் பணத்தை முதலீடு செய்தனர்.

இவ்வாறு சுமார் ரூ.1500 கோடியை அந்த நிறுவனம் வசூலித்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த 2015–ம் ஆண்டு அந்த நிறுவனம் திடீரென மூடப்பட்டது. இதனால் பணத்தை இழந்த பொதுமக்கள் போலீசில் புகார் தெரிவித்தனர். ஆனால் இந்த புகார் மீது நடவடிக்கை எடுக்கப்படாமல் அந்த புகார் மனுக்கள் நிலுவையிலேயே இருந்து வந்தாக தெரிகிறது.

இதைத் தொடர்ந்து அந்த நிதி நிறுவனத்தில் பணம் செலுத்தியவர்கள் சார்பில் மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு வருமாறு:–

மேற்கண்ட நிதி நிறுவன முதலீட்டாளர்கள் தமிழகம் மட்டுமின்றி நாட்டின் பல்வேறு மாநிலங்களிலும் லட்சக்கணக்கானோரை மோசடி செய்து பணத்தை சேர்த்து உள்ளனர்.

தற்போது அவர்கள் டெல்லியில் தலைமறைவாக உள்ளதாக தெரிய வருகிறது. கடந்த 2 ஆண்டுகளாக அவர்களை தமிழக போலீசார் கைது செய்ய வில்லை. எனவே இந்த வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றி உத்தரவிடுகிறோம். அப்பாவி மக்களின் பணத்தை மோசடி செய்த அந்த நிதி நிறுவனத்தினரை சி.பி.ஐ. அதிகாரிகள் கைது செய்து அவர்களிடம் இருந்து பணத்தை மீட்டு உரியவர்களிடம் ஒப்படைப்பார்கள் என்று நம்புகிறோம்.

இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர். அதன் பேரில் சி.பி.ஐ. போலீசார் இந்த மோசடியில் தொடர்புடைய மத்திய பிரதேசத்தை சேர்ந்தவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்