ஈரோடு மாவட்டத்தில் இருந்து விதை மஞ்சளை வெளி நாடுகளுக்கு அனுப்பக்கூடாது; விவசாயிகள் கோரிக்கை

ஈரோடு மாவட்டத்தில் இருந்து விதை மஞ்சளை வெளி நாடுகளுக்கு அனுப்பக்கூடாது என்று வேளாண் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.

Update: 2018-11-30 23:00 GMT

ஈரோடு,

ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலக வளர்ச்சி மன்ற கூட்ட அரங்கில் வேளாண் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் சி.கதிரவன் தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அதிகாரி கவிதா முன்னிலை வகித்தார். பகல் 11 மணிக்கு விவசாயிகள் தங்களது குறைகளை மனுக்களாக எழுதி மாவட்ட கலெக்டரிடம் வழங்கினார்கள்.

அதைத்தொடர்ந்து விவசாய சங்க பிரதிநிதிகள் தங்கள் பகுதியில் உள்ள விவசாயம் தொடர்பான பிரச்சினைகள் குறித்து பேசினார்கள். அப்போது அவர்கள் கூறியதாவது:–

கீழ்பவானி பாசன பகுதி பயிர்களை காப்பாற்ற பவானிசாகர் அணையில் இருந்து வருகிற 25–ந்தேதி வரை கீழ்பவானி வாய்க்காலில் தண்ணீர் திறக்க வேண்டும்.

கோவை வேளாண்மை பல்கலைக்கழகம், பவானிசாகர் வேளாண்மை ஆராய்ச்சி நிலையம் பரிந்துரையின் பேரில், தாய்லாந்து நாட்டை சேர்ந்த வேளாண்மை துறையினர், கடந்த மாதம் ஈரோட்டுக்கு வந்து விதை மஞ்சளை வாங்க தயாராகி வருகின்றனர். தாய்லாந்து மட்டுமின்றி, தைவான், பெரு, உகாண்டா, கம்போடியா, பர்மா ஆகிய நாடுகளைச் சேர்ந்த விவசாயிகளும் மஞ்சளை அனுப்பி வைக்க கேட்டுக்கொண்டுள்ளனர். ஈரோடு மாவட்டத்தில் இருந்து விதை மஞ்சள் கொடுத்தால், வரும் காலத்தில் மஞ்சள் விவசாயிகள் விலை கிடைக்காமல் தற்கொலை செய்து கொள்ளும் நிலை ஏற்படும். எனவே, ஈரோடு மாவட்டத்தில் இருந்து விதை மஞ்சளை வெளிநாடுகளுக்கு ஒருபோதும் அனுப்பக்கூடாது. பதப்படுத்தப்பட்ட மஞ்சளை மட்டுமே ஏற்றுமதி செய்ய வேண்டும்.

சித்தோடு, கவுந்தப்பாடி வெல்ல மார்க்கெட்டில் இருந்து பழனி பஞ்சாமிர்தம் தயாரிக்க வெல்லம் கொள்முதல் செய்யப்படுகிறது. கலப்படம் காரணமாக பழனி பஞ்சாமிர்தம் தயாரிப்புக்கான வெல்லம் கொள்முதல் படிப்படியாக குறைந்து, வடமாநிலங்களில் கொள்முதல் செய்யும் நிலை உள்ளது. எனவே கவுந்தப்பாடி, சித்தோடு வெல்லம் மார்க்கெட்டில் உணவு பாதுகாப்பு துறையினர் ஆய்வு மேற்கொள்ள வேண்டும்.

2017–2018–ம் ஆண்டு தனியார் சர்க்கரை ஆலைகளுக்கு கரும்பு வெட்டி அனுப்பிய விவசாயிகளுக்கு உடனடியாக ஊக்கத்தொகை வழங்க வேண்டும். தடப்பள்ளி –அரக்கன்கோட்டை பாசன பகுதிகளில் 11 இடங்களில் அரசு கொள்முதல் நிலையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன.

இந்த கொள்முதல் நிலையங்களில் நாள் ஒன்றுக்கு 800 மூட்டைகள் மட்டுமே கொள்முதல் செய்யப்படுகிறது. இதனால் விவசாயிகள் பலர் பாதிக்கப்படுகிறார்கள். எனவே அரசு நெல்கொள்முதல் நிலையங்களில் தினந்தோறும் 1,500 மூட்டைகள் நெல் கொள்முதல் செய்ய வேண்டும்.

பர்கூர் மலைப்பகுதியில் உள்ளவர்கள் ஓய்வூதியம், மானிய உதவித்தொகை மற்றும் கடன் பெறுவதற்கு அந்த பகுதியிலேயே வங்கி தொடங்க வேண்டும்.

ஈரோடு சூளை பகுதியில் ரூ.1 கோடி செலவில் புதிதாக கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டது. இதை உடனடியாக பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும். காற்றினால் சாயும் வாழை மரங்களுக்கும் தகுந்த இழப்பீடு வழங்க வேண்டும்.

பவானிசாகர் பகுதியில் 10–க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் இயங்கி வருகிறது. இந்த தொழிற்சாலைகளில் இருந்து சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் நீர்நிலைகளில் வெளியேற்றப்படுகிறது. இதனால் அங்குள்ள குடிநீர் மாசு அடைந்து காணப்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட தொழிற்சாலைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இந்த ஆண்டு கோமாரி நோய் தடுப்பூசி போடப்பட்ட மாடுகளுக்கும் கோமாரி நோய் தாக்கப்பட்டு உள்ளது. எனவே இதற்கு உடனடியாக தீர்வு காண வேண்டும்.

இவ்வாறு விவசாய சங்க பிரதிநிதிகள் கூறினார்கள்.

அதைத்தொடர்ந்து விவசாய சங்க பிரதிநிதிகளின் கேள்விகளுக்கு அதிகாரிகள் பதில் அளித்தனர். கூட்டத்தில் அரசு அதிகாரிகள் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டார்கள்.

மேலும் செய்திகள்