காங்கிரஸ் அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் மும்பை பயணமா? மந்திரி ரமேஷ் ஜார்கிகோளி பதில்

காங்கிரஸ் அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் மும்பை பயணம் மேற்கொள்வதாக வெளியான தகவலுக்கு மந்திரி ரமேஷ் ஜார்கிகோளி பதில் அளித்துள்ளார்.

Update: 2018-11-30 22:00 GMT
பெங்களூரு,

பெலகாவியில் கூட்டுறவு நிலவள வங்கி தலைவர் பதவிக்கான தேர்தலில் அந்த மாவட்ட பொறுப்பு மந்திரி ரமேஷ் ஜார்கிகோளிக்கும், அதே மாவட்டத்தை சேர்ந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ. லட்சுமி ஹெப்பால்கருக்கும் இடையே பகிரங்க மோதல் ஏற்பட்டது. ஒரே கட்சியை சேர்ந்த 2 தலைவர்கள் மோதிக்கொண்டது, காங்கிரஸ் கட்சிக்கு இக்கட்டான நிலையை ஏற்படுத்தியது.

மாநில காங்கிரஸ் தலைவர்கள் தலையிட்டு இந்த பிரச்சினையை தீர்த்து வைத்தனர். இந்த விவகாரத்தில் லட்சுமி ஹெப்பால்கருக்கு ஆதரவாக மந்திரி டி.கே.சிவக்குமார் செயல்பட்டார். இதற்கு மந்திரி ரமேஷ் ஜார்கிகோளி கடும் எதிா்ப்பு தெரிவித்தார்.

இதைதொடர்ந்து பெலகாவி மாவட்ட காங்கிரஸ் விவகாரங்களில் டி.கே.சிவக்குமார் தலையிடுவதை நிறுத்த வேண்டும் என்றும், இல்லாவிட்டால் கட்சியை விட்டு விலகுவதாகவும் மந்திரி ரமேஷ் ஜார்கிகோளி எச்சரிக்கை விடுத்தார். இதனால் கூட்டணி ஆட்சிக்கு சிக்கல் ஏற்பட்டது.

சித்தராமையா தலையிட்டு இந்த பிரச்சினையை தீா்த்து வைத்தார். இந்த நிலையில் மந்திரி ரமேஷ் ஜார்கிகோளி தலைமையில் அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் மும்பைக்கு செல்ல உள்ளதாக தகவல்கள் வெளியாயின. இதனால் கர்நாடக அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து மந்திரி ரமேஷ் ஜார்கிகோளி பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

நான் பெங்களூருவில் தான் இருக்கிறேன். வேறு எங்கும் செல்லவில்லை. மும்பைக்கோ அல்லது டெல்லிக்கோ போகவில்லை. கடந்த 2 நாட்களாக பெங்களூருவிலேயே உள்ளேன். எனது பெயருக்கு களங்கம் ஏற்படுத்த சிலர் சதி செய்கிறார்கள்.

எனக்கு கருத்துவேறுபாடு இருந்தது உண்மை தான். அதை அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, கூட்டணி ஒருங்கிணைப்பு குழு தலைவர் சித்தராமையா ஆகியோர் தலையிட்டு தீர்த்து வைத்துவிட்டனர். அத்துடன் அந்த விவகாரம் முடிந்துவிட்டது.

ஆனாலும் அடிக்கடி என்னை பற்றி தவறான பிரசாரம் செய்யப்படுகிறது. இதை நான் சகித்துக்கொள்ள மாட்டேன். கட்சியில் எழுந்த அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு காணப்பட்டுவிட்ட நிலையில், எந்த எம்.எல்.ஏ.வும் மும்பைக்கு செல்லவில்லை.

சென்னைக்கும் செல்லவில்லை. யார் எங்கு வேண்டுமானாலும் செல்ல அவர்களுக்கு சுதந்திரம் உள்ளது. அதை தடுக்க நாங்கள் யார்?. எங்கள் கட்சியை சேர்ந்த, தங்களை தாங்களே முக்கிய தலைவர் என்று அறிவித்துக் கொண்டுள்ள சிலர், எனக்கு எதிராக சதி செய்கிறார்கள். இவ்வாறு ரமேஷ் ஜார்கிகோளி கூறினார்.

அதாவது, மந்திரி டி.கே. சிவக்குமாருக்கு எதிராக தான் ரமேஷ் ஜார்கிகோளி இந்த அதிருப்தியை வெளிப் படுத்தியுள்ளார் என்று கூறப் படுகிறது.

மேலும் செய்திகள்