கஞ்சா கடத்திய 7 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது

கஞ்சா கடத்தி வந்த 7 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.

Update: 2018-11-30 22:00 GMT
கோவை,

கோவை பீளமேடு போலீசார் கடந்த அக்டோபர் மாதம் 29-ந் தேதி ரோந்து சென்றனர். அப்போது கோவை கொடிசியா சாலையில் மண்டல அறிவியல் மையம் அருகில் 2 கார்கள் மற்றும் ஒரு மோட்டார் சைக்கிளுடன் சிலர் நின்றிருந்தனர். அவர் களை சந்தேகத்தின் பேரில் பிடித்து போலீசார் விசாரித்த போது கஞ்சா கடத்தி வந்து விற்பனை செய்பவர்கள் என்பது தெரியவந்தது. அதன்பேரில் அந்த கார்களில் இருந்து 110 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.

இது தொடர்பாக மதுரை முத்துப்பட்டியை சேர்ந்த சக்திவேல்(வயது 49), அவருடைய தங்கை ஈஸ்வரி(44), மதுரையை சேர்ந்த அசோக்(31), கோவை சிங்காநல்லூரை சேர்ந்த கோகுலகண்ணன்(23), முகமது ரபீக்(23), ஆவாரம்பாளையத்தை சேர்ந்த தினேஷ்பாபு(24), பிரவீன்(24) ஆகிய 7 பேரை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். கஞ்சா கடத்தியது தொடர்பாக சக்திவேல், முஜிபுர் ரகுமான், முத்துலட்சுமி ஆகிய 3 பேரையும் போலீசார் தேடி வருகிறார்கள்.


இந்த நிலையில் கோவைக்கு கஞ்சா கடத்தி வந்ததாக கைது செய்யப்பட்ட சக்திவேல், ஈஸ்வரி, அசோக், கோகுலகண்ணன், முகமது ரபீக், தினேஷ்பாபு, பிரவீன் ஆகிய 7 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய கோவை மாநகர போலீஸ் துணை கமிஷனர் பாலாஜி சரவணன் பரிந்துரை செய்தார். அதன்பேரில் 7 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய கோவை மாநகர போலீஸ் கமிஷனர் சுமித் சரண் உத்தரவிட்டார். இதற்கான உத்தரவின் நகல் கோவை சிறையில் அடைக்கப்பட்டுள்ள 7 பேருக்கும் போலீசார் மூலம் வழங்கப்பட்டது.

இது குறித்து கமிஷனர் சுமித்சரண் கூறியதாவது:-

கோவையில் உள்ள கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்து இளைஞர் சமுதாயத்தை போதை பழக்கத்துக்கு அடிமையாக்கி சீரழித்து வருவதை தடுக்க கடும் நடவடிக்கைகள் மேற்கொள்ள ப்பட்டு வருகின்றன. அதன்படி தற்போது கஞ்சா விற்ற 7 பேரும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். கோவைக்கு கஞ்சா கடத்தி வந்து விற்பனை செய்யும் கும்பலை ஒடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்