புயல் பாதிப்பு குறித்த கணக்கெடுக்கும் பணி ஒரு சில நாட்களில் முடிவடையும் அமைச்சர் காமராஜ் தகவல்
புயல் பாதிப்பு குறித்த கணக்கெடுக்கும் பணி ஒரு சில நாட்களில் முடிவடையும் என அமைச்சர் காமராஜ் கூறினார்.
திருவாரூர்,
திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கஜா புயலினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரண பணிகளின் முன்னேற்றம் மற்றும் சீரமைப்பு பணிகள் குறித்து ஆய்வு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் அமைச்சர் காமராஜ் கலந்து கொண்டு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
திருவாரூர் மாவட்டத்தில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது. நிவாரண பொருட்கள் வழங்கும் பணியும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. நகர் பகுதியை பொறுத்தவரை ஒரு சில இடங்கள் தவிர 100 சதவீதமும், கிராமப்புறங்களில் 40 சதவீதமும் மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது. இந்த பணியில் 3,600 ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இன்னும் ஒரு சில நாட்களில் நிலைமை சீரடையும்.
புயல் பாதிப்பை தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில் சுகாதாரத்துறையின் நடவடிக்கையால் தொற்று நோய் வராமல் தடுக்கப்பட்டுள்ளது. நகர், கிராமப்பகுதிகளில் விழுந்த மரங்கள் 80 சதவீதம் வெட்டப்பட்டு அப்புறப்படுத்தப்பட்டுள்ளது. முகாமில் உள்ளவர்களுக்கு தொடர்ந்து உணவு வழங்கப்பட்டு வருகிறது.
மேகதாதுவில் கர்நாடக அரசு அணை கட்டுவதை அனுமதிக்கமாட்டோம். அதற்கான சட்டரீதியான நடவடிக்கை அரசு எடுக்கும். சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் ஐ.ஜி. பொன்மாணிக்கவேல் பதவி காலம் நீட்டிப்பு குறித்து நீதிமன்றம் வழங்கிய உத்தரவு குறித்து கருத்து கூற இயலாது. பயிர்்க்காப்பீட்டு செய்வதற்கான காலத்தை நீட்டிப்பு செய்வது குறித்து அரசு முடிவு செய்யும். புயல் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இலவச மண்எண்ணெய் வழங்கப்பட்டு வருகிறது. புயல் பாதிப்பு குறித்த கணக்கெடு்க்கும் பணிகள் ஒரு சில நாட்களில் முடிவடைந்து சேத மதிப்பு குறித்து விவரம் தெரிய வரும்.
இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது உணவு பாதுகாப்புத்துறை ஆணையர் அமுதா, மாவட்ட கலெக்டர் நிர்மல்ராஜ் உள்பட அதிகாரிகள் உடனிருந்ந்தனர்.