உத்தமபாளையம் கோட்டத்தில்: நீர்நிலைகளை மீண்டும் ஆக்கிரமித்தால் கடும் நடவடிக்கை - கலெக்டர் எச்சரிக்கை

உத்தமபாளையம் வருவாய் கோட்டத்தில் நீர்நிலைகளில் மீண்டும் ஆக்கிரமிப்பு செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் பல்லவி பல்தேவ் கூறினார்.

Update: 2018-11-30 22:00 GMT
உத்தமபாளையம், 

உத்தமபாளையம் வருவாய் கோட்டத்தில் போடி, உத்தமபாளையம் ஆகிய 2 தாலுகாக்கள் உள்ள. இதில் கம்பம், சின்னமனூர், போடி, கூடலூர் ஆகிய நகராட்சிகளும், உத்தமபாளையம், தேவாரம், ஓடைப்பட்டி, மேல சொக்கநாதபுரம், பண்ணைப்புரம் உள்ளிட்ட 14 பேரூராட்சிகளும், ராயப்பன்பட்டி தே.சிந்தலைசேரி, பல்லவராயன் பட்டி, முத்துலாபுரம், அப்பிபட்டி என 40-க்கும் மேற்பட்ட கிராம ஊராட்சிகளும் உள்ளன.

இந்த பகுதிகளில் நீர்நிலை புறம்போக்குகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ் உத்தரவிட்டார். அதன்படி உத்தமபாளையம் வருவாய் கோட்ட அளவிலான அதிகாரிகள் கூட்டம் கடந்த சில நாட்களுக்கு முன்பு உத்தமபாளையம் சப்-கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு சப்-கலெக்டர் வைத்திநாதன் தலைமை தாங்கினார், இதில் வருவாய்த்துறை, பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் மற்றும் நகராட்சி கமிஷனர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், பேரூராட்சி செயல் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் உத்தமபாளையம் வருவாய் கோட்டத்தில் உள்ள நீர்நிலை புறம்போக்கு மற்றும் போக்குவரத்திற்கு இடையூறாக தேசிய நெடுஞ்சாலை, மாநில நெடுஞ்சாலை, மற்றும் நகராட்சி, பேரூராட்சி சாலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை முறையாக அளவீடு செய்து அகற்றுவது என்று முடிவு செய்யப்பட்டது. அதன்படி முதற்கட்டமாக போடி, கம்பம், சின்னமனூர் ஆகிய நகராட்சி பகுதிகளில் பல வருடங்களாக ஆக்கிரமிப்பில் இருந்த கண்மாய், குளங்கள் மற்றும் நீர்வரத்து வாய்க்கால் ஆகியவற்றில் உள்ள ஆக்கிரமிப்புகளை பொக்லைன் எந்திரம் மூலம் அகற்றி வருகின்றனர்.

இந்தநிலையில் தேனி மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ் நேற்றுமுன்தினம் உத்தமபாளையம் சப்-கலெக்டர் அலுவலகத்துக்கு வந்து பொதுமக்கள் கொடுத்த மனுக்கள் மீதான நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்தார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி வருகிறோம். இதையடுத்து நகராட்சி, பேரூராட்சி உள்ளிட்ட பகுதிகளில் போக்குவரத்திற்கு இடையூறாக உள்ள தேசிய நெடுஞ்சாலை, மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும். சர்வே பணி முடித்துவிட்டுத்தான் ஆக்கிரமிப்புகளை அகற்றி வருகின்றனர். நீர்நிலைகளில் ஆக்கிரமிப்புகள் அகற்றிய இடத்தில் மீண்டும் ஆக்கிரமிப்பு செய்தால், அவை முன்னறிவிப்பின்றி உடனடியாக அகற்றப்படும். மேலும் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு கலெக்டர் கூறினார்.

மேலும் செய்திகள்