மயிலாடுதுறையில் புகைபோக்கியில் தீப்பிடித்ததால் ஓட்டலுக்கு ‘சீல்’ வைப்பு தாசில்தார் நடவடிக்கை

மயிலாடுதுறையில், ஓட்டலின் புகைபோக்கியில் தீப்பிடித்ததால் அந்த ஓட்டலுக்கு ‘சீல்’ வைக்கப்பட்டது.

Update: 2018-11-30 22:30 GMT

மயிலாடுதுறை, 

நாகை மாவட்டம் மயிலாடுதுறை பழைய பஸ் நிலையத்தின் பின்புறம் ஒரு அசைவ ஓட்டல் உள்ளது. இந்த ஓட்டலில் நேற்று முன்தினம் இரவு புகைபோக்கியில் திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதனால் பஸ் நிலையம் முழுவதும் ஒரே புகை மண்டலமாக காட்சி அளித்தது. இதனால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

மேலும் ஓட்டலின் உள்புறமும் புகை பரவியதால் அங்கு சாப்பிட்டுக் கொண்டு இருந்த வாடிக்கையாளர்கள் அலறியடித்து கொண்டு ஓட்டலுக்குள் இருந்து வெளியில் ஓடி வந்தனர்.

இதுகுறித்து உடனடியாக மின்சார அலுவலகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்ததும் மின்வாரிய ஊழியர்கள் அங்கு வந்து ஓட்டலுக்கு செல்லும் மின் இணைப்பை துண்டித்தனர். இதற்கிடையில் இதுகுறித்த தகவல் அறிந்த தீயணைப்பு நிலைய அலுவலர் அன்பழகன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் அங்கு விரைந்து வந்து ஓட்டலில் மேலும் தீ பரவாமல் அணைத்தனர்.

இந்த தீ விபத்து குறித்த தகவல் அறிந்ததும் தாசில்தார் விஜயராகவன் நேற்று அந்த ஓட்டலுக்கு நேரில் சென்று பார்வையிட்டார். சுமார் 1,000 பேர் உட்கார்ந்து சாப்பிடும் இடம், 25 பணியாளர்கள் வேலை செய்யும் ஓட்டலில் வெளியே செல்வதற்கு 2½ அடி அகல பாதை இருப்பது தெரிய வந்தது. இதனை யடுத்து பொதுமக்களின் நலன் கருதி தாசில்தார் உத்தரவின் பேரில் அந்த ஓட்டலுக்கு ‘சீல்’ வைக்கப்பட்டது.

மேலும் செய்திகள்