தர்மபுரி, கிருஷ்ணகிரியில் ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்

தர்மபுரி, கிருஷ்ணகிரியில் ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2018-11-30 22:45 GMT
தர்மபுரி,

கிருஷ்ணகிரி புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள அண்ணா சிலை முன்பு, கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் சந்திரன், சின்னசாமி, நந்தகுமார், மாதப்பன், அப்பர்சாமி, வெங்கடேசன் மற்றும் நாராயணன் ஆகியோர் கூட்டுத்தலைமை தாங்கினார்கள். ஜாக்டோ-ஜியோ உயர்மட்டக்குழு உறுப்பினர் ஜெயராமன் சிறப்புரையாற்றினார். இதில் நிர்வாகிகள், பவுன்ராஜ், நாகராஜ், சேகர், ரவி, ஹரி, குமாரி கஸ்தூரி, சின்னப்பன் ஆகியோர் வாழ்த்தி பேசினார்கள்.

ஆர்ப்பாட்டத்தின் போது, பங்களிப்பு ஓய்வூதியத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாட்டை நீக்கி மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும். உயர்நிலை பள்ளி தலைமைஆசிரியர், முதுநிலை ஆசிரியர், அமைச்சுப் பணியாளர்களுக்கு ஊதிய முரண்பாட்டை களைய வேண்டும். சத்துணவு, அங்கன்வாடி, தொகுப்பூதிய ஆசிரியர்களுக்கு வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும். 21 மாத ஊதிய நிலுவைத்தொகை வழங்க வேண்டும் என்பது போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினார்கள்.

இதேபோல் தர்மபுரி பி.எஸ்.என்.எல். அலுவலகம் முன்பு ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் சுருளிநாதன், தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் ரத்தினம், தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்க மாவட்ட தலைவர் கவுரன் ஆகியோர் தலைமை தாங்கினார்கள். அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் சேகர், பொருளாளர் புகழேந்தி, மகளிரணி துணை அமைப்பாளர் இளவேனில், வேளாண்மை துறை அமைச்சு பணியாளர் சங்க மாநில துணைத்தலைவர் யோகராசு, தோழமை சங்க நிர்வாகிகள் ஆனந்தன், பாஸ்கரன், பழனி, பெரியசாமி உள்ளிட்டோர் கோரிக்கைகளை விளக்கி பேசினார்கள்.

மேலும் செய்திகள்