அதியமான்கோட்டையில் காலபைரவர் ஜெயந்தி-தேய்பிறை அஷ்டமி சிறப்பு வழிபாடு திரளான பக்தர்கள் சாமி தரிசனம்

அதியமான்கோட்டை தட்சணகாசி காலபைரவர் கோவிலில் காலபைரவர் ஜெயந்தி விழா மற்றும் தேய்பிறை அஷ்டமி சிறப்பு வழிபாடு நேற்று நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Update: 2018-11-30 22:30 GMT
நல்லம்பள்ளி, 

தர்மபுரி மாவட்டம் அதியமான்கோட்டையில் பிரசித்திபெற்ற தட்சணகாசி காலபைரவர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஒவ்வொரு மாதமும் தேய்பிறை அஷ்டமி நாளில் சிறப்பு வழிபாடு நடைபெறுவது வழக்கம். இதன்படி நேற்று தேய்பிறை அஷ்டமி சிறப்பு வழிபாடு மற்றும் காலபைரவர் ஜெயந்தி விழா நடந்தது. இதையொட்டி காலை முதல் காலபைரவருக்கு கணபதி ஹோமம், அஷ்டலட்சுமி ஹோமம், அஷ்டபைரவர் ஹோமம் ஆகியவை நடைபெற்றன. இதைத்தொடர்ந்து கோபூஜையும், மூலமந்திர யாகம் உள்ளிட்ட பல்வேறு வகையான சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன.

இதைத்தொடர்ந்து காலபைரவருக்கு மஞ்சள், சந்தனம் பால் உள்ளிட்ட பல்வேறு பொருட்களால் சிறப்பு அபிஷேகமும், உபகார பூஜைகள் நடைபெற்றது. பின்னர் காலபைரவர் தங்ககவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு பூசணியில் விளக்கேற்றி வழிபாடு நடத்தினார்கள்.

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள், கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களை சேர்ந்த பக்தர்கள் திரளாக பங்கேற்று நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். இதில் கலந்து கொண்டவர்களுக்கு உழவார பணிக்குழு சார்பில் சிறப்பு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. இரவு 1,008 கிலோ மிளகாய், 108 கிலோ மிளகு ஆகியவற்றை கொண்டு சத்ரு சம்ஹார யாகம் மற்றும் பைரவர் யாகம் நடந்தது.

இதைத்தொடர்ந்து சாமி திருவீதி உலா நடைபெற்றது. சிறப்பு வழிபாட்டையொட்டி கோவில் வளாகம் மற்றும் சுற்றி உள்ள பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. இன்று (சனிக்கிழமை) காலை சாமிக்கு 1,008 லிட்டர் பாலை கொண்டு சிறப்பு அபிஷேகம் மற்றும் மகாதீபாராதனை நடக்கிறது. பின்னர் மஞ்சள் நீராட்டு விழா நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் நித்யா, செயல் அலுவலர் சித்ரா, கோவில் அர்ச்சகர் கிருபாகரன் மற்றும் விழாக்குழுவினர் செய்து இருந்தனர்.

மேலும் செய்திகள்