மாவட்டத்தில் பரவலாக மழை பொதுமக்கள் மகிழ்ச்சி
நாமக்கல் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.;
நாமக்கல்,
நாமக்கல் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக காலை 8 மணிக்கு மேலாக பனிபொழிவு காணப்படுகிறது. அதேபோல் பகலில் வெயிலின் தாக்கமும் அதிகமாகவே இருந்து வந்தது. இந்த நிலையில் நேற்று காலை வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. அதைத்தொடர்ந்து காலை 9.30 மணியளவில் நாமக்கல் நகரில் ஆங்காங்கே விட்டு விட்டு சாரல்மழை பெய்தது.
இதனால் அரசு, தனியார்த்துறை ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் குடைகளை பிடித்துக் கொண்டு செல்வதை காண முடிந்தது. சாரல்மழை மற்றும் பனிபொழிவு காரணமாக குளிர்ச்சியான சீதோஷ்ண நிலை நிலவியது. கொல்லி மலையில் பெய்த மழை காரணமாக காரவள்ளி கருவாட்டாற்றில் வெள்ளம் ஏற்பட்டது.
இதற்கிடையே நேற்று முன்தினம் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் ஆங்காங்கே பரவலாக மழை பெய்தது. நேற்று காலை 6 மணி நிலவரப்படி பதிவான மழை அளவு மி.மீட்டரில் வருமாறு:-
மங்களபுரம்-4, மோகனூர்-4, சேந்தமங்கலம்-4, நாமக்கல்-3, குமாரபாளையம்-2, திருச்செங்கோடு-2, புதுச்சத்திரம்-2, ராசிபுரம்-1 என மாவட்டத்தில் மொத்தம் 22 மி.மீட்டர் மழை பெய்துள்ளது. மாவட்டத்தில் பரவலாக மழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.