வேலூர் கோட்ட தபால் அலுவலகங்களில் வங்கி சேவை தொடக்கம் அதிகாரி தகவல்
வேலூர் கோட்டத்தில் உள்ள தபால் அலுவலகங்களில் வருகிற 5-ந்தேதி முதல் வங்கி சேவை தொடங்கப்பட இருப்பதாக கோட்ட கண்காணிப்பாளர் தெரிவித்தார்.;
வேலூர்,
வேலூர் தலைமை தபால் அலுவலகம் பிளாஸ்டிக் தடை செய்யப்பட்ட தூய்மை வளாகமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக இங்கு சேகரிக்கப்படும் குப்பைகளை மக்கும் குப்பை, மக்காத குப்பைகளாக தரம் பிரித்து அலுவலக வளாகத்தில் பள்ளம் தோண்டி அதில் புதைத்து எருவாக மாற்றி வருகின்றனர். இதுகுறித்து தபால் அலுவலக வளாகத்தில் பிளாஸ்டிக் தடை செய்யப்பட்ட தூய்மை வளாகம் என்ற அறிவிப்பு பலகை வைக்கப்பட்டது. இதனை மாநகராட்சி கமிஷனர் சிவசுப்பிரமணியன் திறந்துவைத்து, குப்பைகள் தரம் பிரிக்கும் முறையை பார்வையிட்டார்.
மேலும் தூய்மை இந்தியா திட்டம் குறித்து நடைபெற்ற கட்டுரை போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. வேலூர் கோட்ட கண்காணிப்பாளர் கோவிந்தராஜ் தலைமை தாங்கினார். முதல் 3 இடங்களை பிடித்தவர்களுக்கு மாநகராட்சி கமிஷனர் சிவசுப்பிரமணியன் பரிசு வழங்கினார். போஸ்ட் மாஸ்டர் கோமல்குமார், மக்கள் தொடர்பு அலுவலர் செல்வகுமார் ஆகியோர் உடனிருந்தனர்.
பின்னர் கோட்ட கண்காணிப்பாளர் கோவிந்தராஜ் கூறியதாவது:-
வேலூரில் உள்ள 5 தபால் அலுவலகங்களில் பணி நேரம் வருகிற 15-ந் தேதி முதல் மாற்றப்பட்டுள்ளது. காலை 9.30 முதல் மாலை 5.30 மணி வரை இயங்கிவந்த வேலப்பாடி தபால் அலுவலகம் இனி பகல் 11 மணி முதல் இரவு 7 மணி வரை இயங்கும். காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை இயங்கி வந்த தலைமை தபால் அலுவலகம் காலை 9 மணி முதல் இரவு 8 மணி வரையும், காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை இயங்கி வந்த வி.ஐ.டி. வளாகத்தில் உள்ள தபால் அலுவலகம் காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணிவரையும் இயங்கும்.
காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை இயங்கி வந்த சத்துவாச்சாரி தபால் அலுவலகம் காலை 8.30 மணி முதல் மாலை 4.30 மணி வரையிலும், காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை இயங்கிய சைதாப்பேடை தபால் அலுவலகம் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரையிலும் இயங்கும்.
அதேபோன்று வேலூர் தலைமை தபால் அலுவலகம் மற்றும் வேலூர் கோட்டத்தில் உள்ள 45 துணை தபால் அலுவலகங்கள், 105 கிளை தபால் அலுவலகங்களில் இந்தியா போஸ்ட் பேமென்ட் வங்கி சேவை தொடங்கப்படுகிறது. முதல் கட்டமாக வருகிற 5-ந் தேதி தலைமை தபால் அலுவலகம் மற்றும் 10 துணை தபால் அலுவலகங்களில் இந்த வங்கி சேவை தொடங்கப்படுகிறது.
இந்த வங்கிகளில் பொதுமக்கள் விரல் ரேகையை பதிவுசெய்து கணக்கு தொடங்கலாம். மற்ற அலுவலகங்களில் டிசம்பர் 31-ந் தேதிக்குள் வங்கி சேவை தொடங்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.