பாளையங்கோட்டையில் ரூ.1 கோடி பூங்கா இடத்தை ஆக்கிரமித்து அமைக்கப்பட்ட தொழுவம் அகற்றம் மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை

பாளையங்கோட்டையில் ரூ.1 கோடி மதிப்பிலான பூங்கா இடத்தை ஆக்கிரமித்து அமைக்கப்பட்டு இருந்த தொழுவம் அகற்றப்பட்டது.

Update: 2018-11-30 22:00 GMT

நெல்லை,

பாளையங்கோட்டையில் ரூ.1 கோடி மதிப்பிலான பூங்கா இடத்தை ஆக்கிரமித்து அமைக்கப்பட்டு இருந்த தொழுவம் அகற்றப்பட்டது.

ஆக்கிரமிப்பு அகற்றம்

நெல்லை மாநகராட்சி ஆணையாளர் (பொறுப்பு) நாராயண நாயர் உத்தரவுப்படி மாநகராட்சி பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நடைபெற்று வருகிறது. நேற்று 17–வது வார்டுக்கு உட்பட்ட பாளையங்கோட்டை வி.எம்.சத்திரம் பகுதியில் ஆக்கிரமிப்புகளை அகற்றினர்.

பாளையங்கோட்டை மண்டல உதவி ஆணையாளர் அய்யப்பன், உதவி செயற்பொறியாளர் பாஸ்கர் ஆகியோர் தலைமையில் நேற்று மாநகராட்சி ஊழியர்கள் வி.எம்.சத்திரம் பகுதிக்கு சென்றனர். அங்கு சாலையோரத்தில் உள்ள ஆக்கிரமிப்பு கடைகள், சுவர்கள், ஷெட்டுகளை அகற்றினர்.

ரூ.1 கோடி இடம்

அப்போது அங்குள்ள வீட்டு வசதி வாரிய குடியிருப்பு வளாகத்தில் மாநகராட்சி பூங்கா அமைப்பதற்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட ரூ.1 கோடி மதிப்பிலான 25 சென்ட் இடத்தில் தனியார் ஒருவர் ஆக்கிரமித்து தொழுவம் அமைத்து மாடுகளை வளர்த்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து அதிகாரிகள் அங்கு சென்று பொக்லைன் எந்திரம் மூலம் மாட்டு தொழுவத்தை இடித்து முழுமையாக அகற்றினர். மேலும் அங்கு துப்புரவு பணியும் உடனடியாக மேற்கொள்ளப்பட்டது.

எனவே, பொதுமக்கள் வியாபார நிறுவனங்கள் மற்றும் கட்டுமானங்கள் போக்குவரத்துக்கு இடையூறாக மாநகராட்சி தெருக்களில் ஆக்கிரமிப்பு செய்திருந்தால் தாமாக முன்வந்து ஆக்கிரமிப்புகளை அகற்றி விடுங்கள். இல்லை என்றால் மாநகராட்சி சார்பில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுவதுடன், சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநகாரட்சி ஆணையாளர் (பொறுப்பு) நாராயண நாயர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மேலும் செய்திகள்