மாணவிக்கு பாலியல் தொந்தரவு: கட்டிட தொழிலாளி, பெண்ணுக்கு 5 ஆண்டு சிறை - திருப்பூர் மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் தீர்ப்பு

திருப்பூரில் மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வழக்கில் கட்டிட தொழிலாளி, பெண்ணுக்கு 5 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனை விதித்து திருப்பூர் மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் தீர்ப்பு கூறப்பட்டது.

Update: 2018-11-29 23:00 GMT
திருப்பூர், 

திருப்பூர் பாரப்பாளையம் சிவசக்தி நகர் பகுதியை சேர்ந்தவர் முருகேசன் (வயது 46). போயம்பாளையத்தை சேர்ந்தவர் ஜெயா(47). இருவரும் கட்டிடத்தொழிலாளிகள். இதன்காரணமாக முருகேசன் அடிக்கடி ஜெயாவின் வீட்டுக்கு சென்று வந்துள்ளார். அப்போது ஜெயாவின் வீட்டுக்கு பக்கத்தில் 13 வயதான 8-ம் வகுப்பு மாணவி மீது முருகேசனுக்கு ஆசை ஏற்பட்டுள்ளது. இதை ஜெயாவிடம் கூறியுள்ளார்.

இந்தநிலையில் கடந்த 21-11-2015 அன்று ஜெயா, அந்த மாணவியை நைசாக பேசி தனது வீட்டுக்கு அழைத்துச்சென்றுள்ளார். அங்கு ஏற்கனவே முருகேசன் இருந்துள்ளார். வீட்டுக்குள் அந்த மாணவியை அனுப்பி வைத்து விட்டு ஜெயா வெளியே காத்திருந்துள்ளார். முருகேசன் அந்த மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். ஒருகட்டத்தில் சத்தம் போட்டு முருகேசனை தள்ளி விட்டு அந்த மாணவி வெளியே ஓடி வந்தார். நடந்த சம்பவத்தை பற்றி யாரிடமாவது கூறினால் கொலை செய்து விடுவதாக ஜெயா அந்த மாணவியை மிரட்டியுள்ளார்.

இதைத்தொடர்ந்து அந்த சிறுமி அப்பகுதியில் உள்ள மூதாட்டியிடம் நடந்த சம்பவத்தை கூறி அழுதார். மேலும் தனது பெற்றோரிடமும் விவரத்தை அந்த மாணவி தெரிவித்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் ஜெயாவிடம் கேட்டபோது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. அதன்பிறகு திருப்பூர் வடக்கு மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்க போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து முருகேசன், ஜெயா ஆகிய 2 பேரையும் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.

இதுதொடர்பான வழக்கு விசாரணை திருப்பூர் மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. நேற்று இந்த வழக்கில் தீர்ப்பு கூறப்பட்டது. மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த முருகேசனுக்கு 5 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனை, ரூ.5 ஆயிரம் அபராதம், அபராதம் கட்டத் தவறினால் மேலும் 1 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனையும், இதற்கு உடந்தையாக இருந்த ஜெயாவுக்கு 5 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனை, ரூ.5 ஆயிரம் அபராதமும், அபராதம் கட்டத்தவறினால் மேலும் 1 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனை விதித்து நீதிபதி ஜெயந்தி தீர்ப்பு கூறினார். இந்த வழக்கில் அரசு தரப்பில் சிறப்பு அரசு வக்கீல் பரிமளா ஆஜராகி வாதாடினார். 

மேலும் செய்திகள்