கோவை ரெயில்நிலையத்தில் சூரியசக்தி மின்தகடுகள் பொருத்தும் பணி மும்முரம்: தினமும் 450 யூனிட் மின்சாரம் கிடைக்கும்

கோவை ரெயில்நிலையத்தில் சூரிய சக்தி மின் தகடுகள் பொருத்தும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதன் மூலம் தினமும் 450 யூனிட் மின்சாரம் கிடைக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

Update: 2018-11-29 21:45 GMT
கோவை,


நாடு முழுவதும் உள்ள ரெயில்நிலையங்களில் சூரிய சக்தி மின் தகடுகளை பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது. அதன்படி கோவை ரெயில்நிலையத்தின் முதல் மற்றும் 2-வது நடைமேடை யின் மேற்கூரையில் சூரிய சக்திமின் தகடுகள் பொருத்தும் பணி மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

இந்த பணிகள் குறித்து ரெயில்வே தொழில்நுட்ப பிரிவு அதிகாரிகள் கூறியதாவது:-

கோவை ரெயில் நிலையத்தில் 100 கிலோ வாட் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் வகையில் சூரியசக்தி மின் தகடுகள் பொருத்தப்பட்டு வருகின்றன. இந்த பணிகள் அடுத்த மாதம் (டிசம்பர்) முடிவடையும். இந்த பணிகளை டெல்லியில் உள்ள ‘அஸூர்’ நிறுவனம் மேற்கொண்டு வருகிறது.

அந்த நிறுவனம் முழுசெலவையும் ஏற்று மின்சாரத்தை உற்பத்தி செய்து ரெயில்வே துறைக்கு குறைந்த விலையில் கொடுக்கும். தற்போது கோவை ரெயில்நிலையத்தில் தினமும் 2,100 யூனிட் மின்சாரம் உபயோகப்படுத்தப்படுகிறது. மின்விளக்கு, மின்விசிறி உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு இது செலவாகிறது.

தமிழக மின்சாரத்துறை மூலம் ஒரு யூனிட் ரூ.8 வரை விலை கொடுத்து வாங்கப்படுகிறது. சூரிய சக்தி மின் உற்பத்தி மூலம் கோவை ரெயில்நிலையத்தில் தினமும் 450 யூனிட் மின்சார உற்பத்தியாகும். அந்த மின்சாரத்தை தனியார் நிறுவனம் ரெயில்நிலையத்துக்கு பாதிவிலையில் வழங்கும்.

இதன் மூலம் மின்சாரத்துக்கான செலவு குறையும். வருங்காலங்களில் 150 கிலோவாட் சூரியசக்தி மின்தகடு பொருத்தும் திட்டமும், வடகோவை, சிங்காநல்லூர், பீளமேடு ரெயில்நிலையங்களில் சூரியசக்தி மின்தகடு பொருத்தும் திட்டமும் உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

மேலும் செய்திகள்