‘கஜா’ புயலால் பாதிக்கப்பட்ட திண்டுக்கல் மாவட்டத்துக்கு: ரூ.250 கோடி நிவாரணம் கேட்டு மத்திய குழுவுக்கு அறிக்கை - அமைச்சர் சீனிவாசன் பேட்டி
‘கஜா’ புயலால் பாதிக்கப்பட்டுள்ள திண்டுக்கல் மாவட்டத்துக்கு ரூ.250 கோடி நிவாரண தொகை கேட்டு மத்திய குழுவிடம் அறிக்கை அளிக்கப்பட்டுள்ளது என்று வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறினார்.
திண்டுக்கல்,
திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த 16-ந்தேதி ‘கஜா’ புயல் கோரத்தாண்டவமாடியது. அப்போது பலத்த சூறாவளி காற்றுடன் கனமழை பெய்தது. இதனால் மாவட்டத்தில் ஆயிரக்கணக்கான மரங்கள், மின்கம்பங்கள் சாய்ந்து விழுந்தன. 7 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில் மழைக்கு உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நிவாரண தொகை வழங்கும் நிகழ்ச்சி, திண்டுக்கல் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் நடந்தது.
இந்த நிகழ்ச்சிக்கு வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தலைமை தாங்கினார். கலெக்டர் டி.ஜி.வினய், உதயகுமார் எம்.பி. ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில், ‘கஜா’ புயலால் உயிரிழந்த 7 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.10 லட்சத்துக்கான காசோலையை வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் வேலு, மாவட்ட வன அலுவலர் வித்யா உள்பட பலர் கலந்துகொண்டனர்.
இதையடுத்து அமைச்சர், நிருபர்களுக்கு பேட்டி அளிக்கும்போது கூறியதாவது:-
கடந்த சில நாட்களுக்கு முன்பு திண்டுக்கல் மாவட்டத்தில் ‘கஜா’ புயலால் 7 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் அவர்களுடைய குடும்பத்தினருக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரண தொகை வழங்கப்பட்டுள்ளது. சேலத்தை சேர்ந்தவர்களுக்கு அந்த மாவட்ட நிர்வாகம் மூலம் நிவாரண தொகை வழங்க, காசோலை அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தில் கொடைக்கானல் பகுதியில், 14 மலைக்கிராமங்களை தவிர மற்ற அனைத்து பகுதிகளுக்கும் மின்சாரம் வினியோகம் செய்யப்பட்டுள்ளது. மற்ற பகுதிகளுக்கு இன்று (அதாவது நேற்று) மாலைக்குள் மின்சாரம் வழங்கப்படும். மாய மந்திரத்தால் எதையும் செய்துவிட முடியாது. மின்சாரம் இல்லாத பகுதிகளில் ஜெனரேட்டர்கள் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.
புயலால் மாவட்டம் முழுவதும் 9 ஆயிரம் எக்டேர் பரப்பளவில் பயிர்கள் சேதம் அடைந்துள்ளன. ‘கஜா’ புயலால் திண்டுக்கல் மாவட்டத்தில் ரூ.250 கோடி சேதம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து மத்திய குழுவுக்கு அறிக்கை அளிக்கப்பட்டுள்ளது. ‘கஜா’ புயலால் பாதிக்கப்பட்ட மற்ற மாவட்டங்களை பார்வையிட்டபோது, பாதிப்புகளை பார்த்து மத்திய குழுவினர் கதி கலங்கிவிட்டனர். ஆய்வுக்கு பின்னர் இதுகுறித்து பிரதமரிடம் கூறி உரிய நடவடிக்கை எடுப்பதாக மத்திய குழுவினர் தெரிவித்துள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் தொய்வு இன்றி நிவாரண பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது. கலெக்டரும் சிறப்பான முறையில் பணிகளை மேற்கொண்டு வருகிறார். இதனால் அவருக்கு அமைச்சர், ஐஸ் வைக்க வேண்டிய அவசியம் இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
இதையடுத்து நிலக்கோட்டையில் ஒரு பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட வனத்துறை அமைச்சர் 3 பள்ளிகளை சேர்ந்த 1,072 மாணவ- மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்களை வழங்கி பேசினார். அவர் பேசும்போது, மாணவ-மாணவிகளின் நலனுக்காக தமிழக பள்ளிக்கல்வித்துறை சார்பில் ரூ.27 ஆயிரத்து 400 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. 6 முதல் 8-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு ஸ்மார்ட் வகுப்பு, 9 முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு ரூ.468 கோடியில் இணையவழி கல்வி முறையை நடைமுறைப்படுத்தவும், ஒவ்வொரு பள்ளியிலும் தலா ரூ.25 லட்சம் மதிப்பில் உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கடந்த 2011 முதல் 2016-ம் ஆண்டு வரை, திண்டுக்கல் மாவட்டத்தில் 96 ஆயிரத்து 788 மாணவர்களுக்கு ரூ.27 கோடியே 20 லட்சத்தில் விலையில்லா சைக்கிள்கள் வழங்கப்பட்டுள்ளன. இதேபோல், கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் 128 பள்ளிகளை சேர்ந்த 32 ஆயிரத்து 881 மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள்கள் வழங்கப்பட்டுள்ளது, என்றார்.
இந்த நிகழ்ச்சியில், முன்னாள் மேயர் மருதராஜ், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சாந்தகுமார், தாசில்தார் நவநீதகிருஷ்ணன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.