புயல் நிவாரண தொகையை ரொக்கமாக வழங்கக்கோரி வருவாய்த்துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்

புயல் நிவாரண தொகையை ரொக்கமாக வழங்கக்கோரி நாகையில் வருவாய்த்துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.;

Update: 2018-11-29 22:45 GMT
நாகப்பட்டினம்,

தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் சார்பில் நாகை மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு வருவாய்த்துறை அலுவலர் சங்க மாவட்ட துணை தலைவர் முருகானந்தம் தலைமை தாங்கினார். அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் அந்துவன் சேரல், செயலாளர் அன்பழகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வருவாய்த்துறை சங்க மாவட்ட செயலாளர் இளவரசன், மாநில செய லாளர் பிரேம்சந்திரன் ஆகியோர் கலந்துகொண்டு பேசினர்.

கஜா புயலில் ஏற்பட்ட சேத விவரங்களை கணக்கெடுத்து உரிய நிவாரணம் வழங்க வருவாய்த்துறை ஊழியர்கள் இரவு, பகல் என பாராமல் நிவாரண பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் கோவில்பத்து கிராமத்திற்கு சென்ற தாசில்தார் வாகனத்தை அடித்து நொறுக்கி, தாசில்தாரையும், அவருடன் சென்ற ஊழியர்களையும் தாக்கியவர்களை கைது செய்ய வேண்டும்.

கீழ்வேளூர் புயல் பாதுகாப்பு மையத்தில் தங்கியிருந்த மக்களுக்கு உணவு தயார் செய்து வழங்கும் பணியில் ஈடுபட்டிருந்த கிராம நிர்வாக அலுவலர் மற்றும் உதவியாளரை அரசியல் கட்சி பிரமுகர்கள் தரக்குறைவாக பேசி கொலைமிரட்டல் விடுத்தவர்களையும் கைது செய்ய வேண்டும். கஜா புயலால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் அரசு அறிவித்துள்ள நிவாரண தொகையை ரொக்கமாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் வருவாய்த்துறை சங்கத்தை சேர்ந்த அலுவலர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

முடிவில் மாவட்ட பொருளாளர் பிச்சைபிள்ளை நன்றி கூறினார். 

மேலும் செய்திகள்