அனுமதியின்றி இயங்கும் மணல் குவாரியை மூடக்கோரி குளித்தலையில் கடையடைப்பு போராட்டம்

அனுமதியின்றி இயங்கும் மணல் குவாரியை மூடக்கோரி குளித்தலையில் கடையடைப்பு போராட்டம் நடத்தப்பட்டது.

Update: 2018-11-29 22:45 GMT
குளித்தலை,

ஆற்றுப்பகுதிகளில் அரசு சார்பில் அமைக்கப்படும் மணல் குவாரிகளில் அதிகளவு மணல் அள்ளப்பட்டு வெளிமாநிலங்களுக்கு கடத்தப்படுவதாகவும், ஆகவே, மணல் குவாரிகள் செயல்பட தடை விதிக்க வேண்டும் என்றும் கோர்ட்டில் சமூக ஆர்வலர்கள் வழக்கு தொடர்ந்தனர். அதன்பேரில், பல்வேறு இடங்களில் மணல் குவாரிகளை மூட கோர்ட்டு உத்தரவிட்டது. கட்டுமான பணிகளுக்காக ஓரிரு இடங்களில் மட்டும் அரசு மணல் குவாரிகள் செயல்பட்டு வருகின்றன. ஆனால், மணத்தட்டை காவிரி ஆற்று பகுதியில் அனுமதியின்றி மணல் குவாரி இயங்குவதாகவும், ராஜேந்திரம் ஊராட்சிக்குட்பட்ட தண்ணீர்பள்ளி பகுதியில் மணல் சேமிப்பு கிடங்கு செயல்படுவதாகவும், அதனை மூடக்கோரி குளித்தலையில் இன்று(நேற்று) கடை அடைப்பு போராட்டம் நடத்தப்படும் என்று காவிரி ஆறு பாதுகாப்பு இயக்கம், பல்வேறு கட்சிகள், அமைப்புகள் சார்பில் நடைபெற்ற கலந்தாய்வு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டு அறிவிக்கப் பட்டது.

கடையடைப்புக்கு அழைப்பு விடுத்து நேற்று சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன. துண்டு பிரசுரங்களும் வினியோகம் செய்யப்பட்டது. அதன்படி குளித்தலை நகரப்பகுதியில் உள்ள பெரும்பாலான கடைகளை அதன் உரிமையாளர்கள் அடைத்து போராட்டத்துக்கு தங்களது ஆதரவை தெரிவித்தனர்.

மருந்து கடைகள் உள்பட ஒரு சில கடைகள் மட்டுமே திறந்திருந்தன. திறக்கப்பட்டிருந்த கடைகளையும் மூடி போராட்டத்துக்கு ஆதரவு தர வேண்டும் என்று போராட்டக்குழுவினர் கேட்டுக்கொண்டதற்கிணங்க அந்த கடைகளும் சிறிது நேரத்தில் அடைக்கப்பட்டன.

மேலும் செய்திகள்