கம்பத்தில், தேசிய நெடுஞ்சாலையில்: போக்குவரத்துக்கு இடையூறான ஆக்கிரமிப்புகள் அகற்றம்
கம்பத்தில் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.
கம்பம்,
தமிழகம்-கேரளாவை இணைக்கும் முக்கிய நகரான கம்பத்தின் மையப்பகுதியில் தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ளது. இங்கு சாலையின் இருபுறங்களிலும் வணிக நிறுவனங்களின் விளம்பர தட்டிகள், முகப்பு தகரங்கள் வைத்தும், கடை முன்பு வாகனங்களை நிறுத்தியும் ஆக்கிரமிப்பு செய்து இருந்தனர். இதனால் சாலையில் வாகனங்கள் செல்லமுடியாமல் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இதை தவிர்க்க சாலையின் இருபுறங்களிலும் உள்ள ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் மாவட்ட கலெக்டரிடம் புகார் கொடுத்தனர். இது தொடர்பாக 2 முறை ஆக்கிரமிப்பு அகற்றப்படும் என அறிவிப்பு செய்யப்பட்டது. ஆனால் பல்வேறு காரணங்களால் 2 முறையும் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி தள்ளிவைக்கப்பட்டது.
இதையடுத்து நெடுஞ்சாலைத்துறை உத்தமபாளையம் உதவி கோட்ட பொறியாளர் கிருஷ்ணன் தலைமையில் நெடுஞ்சாலைத்துறையினர் போலீஸ் பாதுகாப்புடன் பொக்லைன் எந்திரத்தின் உதவியுடன் கம்பம் நகரில் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றினர். இந்த பணி ஒழுங்கு முறை விற்பனை கூடம் அருகில் இருந்து தொடங்கியது. ஆக்கிரமிப்பு அகற்றுவதை அறிந்த வணிகர்கள் சிலர் தாங்களாகவே முன்வந்து விளம்பர தட்டிகள், முகப்பு தகரங்கள் மற்றும் கூரைகளை அகற்றினர். ஆக்கிரமிப்பின் போது அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாத வண்ணம் உத்தமபாளையம் போலீஸ் துணை சூப்பிரண்டு சீமைச்சாமி, கம்பம் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் உலகநாதன், சுப்புலட்சுமி மற்றும் போலீசார் பாதுகாப்பு பணி மேற்கொண்டனர். ஆக்கிரமிப்பு அகற்றும் பணியில் கம்பம் நகராட்சி கட்டிட ஆய்வாளர் வீரணன், சர்வேயர்கள், சுகாதார ஆய்வாளர்கள் மற்றும் நெடுஞ்சாலைத்துறை பணியாளர்கள் ஈடுபட்டனர்.