தாளவாடி பகுதியில் 8 மாதமாக ஒரு கிலோ முட்டைகோஸ் விலை 2 ரூபாய் விவசாயிகள் வேதனை
தாளவாடி பகுதியில் 8 மாதமாக ஒரு கிலோ முட்டை கோஸ் 2 ரூபாய்க்கு விற்பதால் விவசாயிகள் வேதனையில் உள்ளார்கள்.
தாளவாடி,
ஈரோடு மாவட்டத்தின் கடைக்கோடியில் கடல் மட்டத்தில் இருந்து 1,105 மீட்டர் உயரத்தில் தாளவாடி, கொங்கள்ளி, பனகஹள்ளி, தொட்டகாஜனூர், பாரதி நகர், கெட்டவாடி, அருள்வாடி போன்ற 40-க்கும் மேற்பட்ட மலை கிராமங்கள் உள்ளன. இங்குள்ள விவசாயிகள் கத்தரி, வெண்டை, தக்காளி பீட்ரூட், சிவப்பு முள்ளங்கி, முட்டைகோஸ், காலிபிளவர், பீன்ஸ் ஆகிய காய்கறி பயிர்களை பயிரிடுவது வழக்கம்.
குறிப்பாக சுமார் 500 ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் முட்டைகோஸ் சாகுபடி செய்துள்ளார்கள். தற்போது முட்டை கோஸ் அறுவடைக்கு தயாராக உள்ளது. ஆனால் மலை கிராமங்களுக்கு தேடி வந்து வாங்கும் வியாபாரிகள் ஒரு கிலோ முட்டைகோசை 2 ரூபாய்க்கு கேட்பதால் விவசாயிகள் வேதனையில் உள்ளார்கள்.
இதுகுறித்து விவசாயிகள் கூறும்போது, ‘3 மாத பயிரான முட்டைகோசை ஒரு ஏக்கருக்கு பயிர் செய்தால் களைஎடுத்தல், உரம், மருந்து என 50 ஆயிரம் ரூபாய் வரை செலவு ஆகிறது. இந்த முறை சாகுபடி செய்தபோது தண்ணீர் பற்றாக்குறை இல்லை என்பதால் முட்டைகோஸ் நன்கு விளைந்துள்ளது. வெளி மார்க்கட்டில் தற்போது ஒரு கிலோ 15 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஆனால் இங்கு வந்து வாங்கும் வியாபாரிகள் ஒரு கிலோ முட்டைகோசை 2 ரூபாய்க்குதான் கேட்கிறார்கள். குறைந்தபட்சம் ஒரு கிலோ 10 ரூபாய்க்கு விற்றால்தான் எங்களுக்கு கட்டுப்படிஆகும். ஆனால் கடந்த 8 மாதமாக விளைச்சல் அதிகம் என்று கூறி வியாபாரிகள் 2 ரூபாய்க்கே கேட்கிறார்கள். அதனால் முட்டைகோசை அறுவடை செய்வதா? இல்லை அப்படியே நிலத்திலேயே உரமாக விட்டுவிடுவதா? என்று தெரியவில்லை‘ என்று வேதனை பட்டார்கள்.