ஆத்தூரில் அரசு பஸ் கண்ணாடியை உடைத்த ரஜினி ரசிகர்கள் 2.0 படம் வெளியாவதில் சந்தேகம் ஏற்பட்டதால் ஆத்திரம்
நடிகர் ரஜினிகாந்த் நடித்த 2.0 திரைப்படம் ஆத்தூர் நகரில் திரையிடப்படுமா? என்ற சந்தேகம் ஏற்பட்டதால் ஆத்திரம் அடைந்த அவருடைய ரசிகர்கள் நேற்று முன்தினம் அரசு பஸ் கண்ணாடியை உடைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஆத்தூர்,
நடிகர் ரஜினிகாந்த் நடித்த 2.0 திரைப்படம் நேற்று திரையரங்குகளில் திரையிடப்பட்டது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு ஆத்தூரில் இந்த படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக ரசிகர்களுக்கு தகவல் கிடைத்தது.
இதனால் திட்டமிட்டப்படி நேற்று இந்த படம் திரையிடப்படுமா? என்று சந்தேகம் அடைந்த அவருடைய ரசிகர்கள் ஆத்திரம் அடைந்து நேற்று முன்தினம் இரவு அங்குள்ள சினிமா தியேட்டர் முன்பு குவிந்தனர்.
அப்போது ரசிகர்களில் சிலர் ஆத்திரம் அடைந்து, சேலத்தில் இருந்து ஆத்தூர் வழியாக கள்ளக்குறிச்சி சென்ற அரசு பஸ் மீது திடீரென கல்வீசி தாக்கினர். இதனிடையே தகவல் அறிந்து அங்கு வந்த ரஜினிகாந்த் ரசிகர் மன்ற நிர்வாகிகள், பஸ் கண்ணாடி உடைப்புக்கு உரிய நஷ்டஈடு தருவதாக அரசு பஸ் டிரைவரிடம் கூறினர்.
இதையடுத்து பஸ் டிரைவர் போலீசில் புகார் எதுவும் கொடுக்காமல் அங்கிருந்து பஸ்சை ஓட்டிச்சென்றார். இதுகுறித்து தகவல் அறிந்த ஆத்தூர் போலீசார் பஸ் நிலைய பகுதியில் தீவிர ரோந்து மேற்கொண்டனர்.
அரசு பஸ் கண்ணாடி உடைப்பு சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தினாலும், நேற்று ரஜினிகாந்தின் 2.0 படம் ஆத்தூரில் உள்ள தியேட்டரில் வெளியானது குறிப்பிடத்தக்கது. ரசிகர்கள் உற்சாகமாக படத்தை கண்டுரசித்தனர்.