திருவொற்றியூர் போலீஸ் நிலையம் எதிரே நகை கடை அதிபர் முகத்தில் மிளகாய் பொடி தூவி கொள்ளையடித்தவர் கைது

திருவொற்றியூர் போலீஸ் நிலையம் எதிரே நகை கடை அதிபர் முகத்தில் மிளகாய் பொடி தூவி 6 பவுன் நகையை கொள்ளையடித்த வழக்கில், கொள்ளையனின் மோட்டார்சைக்கிளில் இருந்த ஆவணங்களை வைத்து அவரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2018-11-29 22:45 GMT
திருவொற்றியூர்,

திருவொற்றியூர் போலீஸ் நிலையம் எதிரே பக்தாராம் சவுத்ரி என்பவருக்கு சொந்தமான ‘ஸ்ரீ கிருஷ்ணா’ என்ற நகைக்கடை உள்ளது. கடந்த மாதம் 30-ந்தேதி இரவு 7 மணியளவில் தொப்பி அணிந்திருந்த மர்மநபர், இவரது கடைக்கு வந்து தங்க சங்கிலி வேண்டும் என்று கேட்டார்.

அவரிடம் 6 பவுன் மதிப்புள்ள 3 தங்க சங்கிலிகளை பக்தாராம் காண்பித்தார். திடீரென அந்த மர்மநபர், தான் தயாராக வைத்து இருந்த மிளகாய் பொடியை நகை கடை அதிபர் பக்தாராம் முகத்தில் தூவி விட்டு, 6 பவுன் தங்க சங்கிலிகளுடன் தப்பி ஓடிவிட்டார்.

இந்த கொள்ளை சம்பவம் குறித்து திருவொற்றியூர் குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் மாலதி வழக்குப்பதிவு செய்து, அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து கொள்ளையனை தேடி வந்தார்.

அப்போது கொள்ளையன் வந்த மோட்டார்சைக்கிள், அந்த நகை கடையின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருப்பது தெரிந்தது. அந்த மோட்டார் சைக்கிளில் இருந்த ஆவணங்களை வைத்து விசாரித்தபோது, கொள்ளையன் சிவகங்கை மாவட்டம் நேரு பஜார் பகுதியை சேர்ந்த சந்துரு (வயது 40) என்பது தெரியவந்தது.

போலீசார் மாறுவேடத்தில் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சந்துரு வீட்டுக்கு சென்றனர். அங்கு அவருடைய மனைவி மகேஸ்வரி மற்றும் 3 குழந்தைகள் மட்டும் இருந்தனர். சந்துருவை காணவில்லை.

சந்துருவின் மனைவியிடம், நாங்கள் சந்துருவின் நண்பர்கள். அவரிடம் பேசவேண்டும் என்று கூறி அவரது செல்போன் எண்ணை தரும்படி போலீசார் கேட்டனர். அவரும் கணவரின் செல்போன் எண்ணை கொடுத்தார்.

அந்த செல்போன் சிக்னலை வைத்து விசாரணை நடத்தியதில், சந்துரு திருவொற்றியூர் அண்ணாமலை நகர் பகுதியில் இருப்பது தெரியவந்தது. தனிப்படை போலீசார் விரைந்து சென்று அண்ணாமலை நகர் மெயின் தெருவில் ஒரு வீட்டில் வாடகைக்கு குடியிருந்த சந்துருவை மடக்கிப்பிடித்து திருவொற்றியூர் போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்று விசாரித்தனர். போலீசாரிடம் சந்துரு கூறியதாவது:-

நான், திருவொற்றியூர் கலைஞர்நகர் பகுதியில் ‘பேக்’ பழுது பார்க்கும் கடை வைத்து உள்ளேன். அதில் போதிய வருமானம் இல்லாததால் தனியாக இருந்த பக்தாராம் நகை கடையில் கொள்ளை அடிக்க முடிவு செய்தேன்.

அதன்படி தங்க சங்கிலி வாங்குவதுபோல் அவரது கடைக்கு சென்று நகைகளை வாங்கி பார்த்தேன். பின்னர் ஏற்கனவே தயாராக கொண்டுசென்ற மிளகாய் பொடியை அவரது முகத்தில் வீசிவிட்டு தங்க சங்கிலிகளுடன் தப்பிச்சென்று விட்டேன்.

நான் கொண்டு சென்ற மோட்டார் சைக்கிளை அவரது கடை அருகே நிறுத்தி இருந்தேன். சிறிது நேரத்துக்கு பிறகு அந்த மோட்டார் சைக்கிளை எடுக்க மீண்டும் அங்கு சென்றேன். ஆனால் அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு இருந்ததால் என்னால் மோட்டார் சைக்கிளை எடுக்க முடியவில்லை.

பின்னர் தீபாவளி பண்டிகையை கொண்டாடுவதற்காக எனது சொந்த ஊருக்கு சென்றுவிட்டேன். நகை கடையில் கொள்ளையடித்த 3 தங்க சங்கிலிகளையும், நான் சம்பாதித்த பணத்தையும் கொண்டு 3 குழந்தைகளுக்கும் நகை வாங்கி வந்து உள்ளதாக கூறி எனது மனைவியிடம் கொடுத்தேன்.

அவள் கடன் நிறைய இருப்பதாக கூறியதால், அந்த தங்க சங்கிலிகளை எனது மனைவி மூலமே அங்குள்ள வங்கியில் அடகு வைத்தேன். அந்த பணத்தில் கடனை அடைத்ததுடன், புதிதாக ஒரு மோட்டார் சைக்கிள் வாங்கிக்கொண்டு தீபாவளி முடிந்து மீண்டும் திருவொற்றியூர் வந்து விட்டேன்.

ஆனால் நகை கடை அருகே நான் விட்டுச்சென்ற எனது மோட்டார் சைக்கிளில் உள்ள ஆவணங்களை வைத்து போலீசார் என்னை மடக்கிப்பிடித்து கைது செய்து விட்டனர். இவ்வாறு அவர் கூறியதாக போலீசார் தெரிவித்தனர்.

இதையடுத்து சந்துருவை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். அவர் வங்கியில் அடகு வைத்த நகைகளை மீட்டு, நகை கடை அதிபர் பக்தாராமிடம் ஒப்படைத்தனர்.

மேலும் செய்திகள்