மன்னார்குடி அருகே சுளுக்கியால் விவசாயி குத்திக்கொலை குடும்ப தகராறில் தம்பி வெறிச்செயல்

மன்னார்குடி அருகே சுளுக்கியால் விவசாயி ஒருவர் குத்திக்கொலை செய்யப்பட்டார். குடும்ப தகராறில் வெறிச்செயலில் ஈடுபட்ட அவருடைய தம்பியை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.;

Update: 2018-11-29 23:00 GMT
சுந்தரக்கோட்டை,

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள ஏத்தக்குடி கிராமத்தை சேர்ந்தவர் வீரையன். இவருடைய மகன்கள் ராஜ்குமார் (வயது40), விஜயகுமார்(35). 2 பேரும் விவசாயிகள் ஆவர். ராஜ்குமார், விஜயகுமார் ஆகிய இருவருக்கும் திருமணமாகி தனித்தனி வீடுகளில் அருகருகே வசித்து வருகிறார்கள்.

வீரையன் தனது மூத்த மகன் ராஜ்குமாரின் வீட்டில் வசித்து வருகிறார். விஜயகுமார் மது குடித்து விட்டு வந்து அடிக்கடி தனது மனைவியிடம் தகராறில் ஈடுபட்டு வந்ததாக தெரிகிறது. நேற்றுமுன்தினம் இரவு விஜயகுமார் குடித்துவிட்டு வந்து மனைவியிடம் தகராறு செய்தார்.


இதுகுறித்து தனது மாமனார் வீரையனிடம் முறையிடுவதற்காக விஜயகுமாரின் மனைவி, ராஜ்குமாரின் வீட்டுக்கு சென்றார். அப்போது விஜயகுமாருக்கும், அவருடைய அண்ணன் ராஜ்குமாருக்கும் இடையே வாக்குவாதம் மூண்டது. இதில் ஆத்திரம் அடைந்த விஜயகுமார், அங்கிருந்து சுளுக்கியால் ராஜ்குமாரின் வயிறு மற்றும் மார்பு பகுதியில் சரமாரியாக குத்தி விட்டு தப்பி ஓடிவிட்டார்.

இதில் ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்த ராஜ்குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுதொடர்பாக தலையாமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விஜயகுமாரை தேடி வருகிறார்கள். குடும்ப தகராறில் விவசாயியை தம்பியே சுளுக்கியால் குத்திக்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்