மாவட்ட அளவில் மாணவ-மாணவிகளுக்கான பேச்சு, கட்டுரை போட்டிகள்
திருவண்ணாமலையில் மாவட்ட அளவில் பள்ளி மாணவ-மாணவிகளுக்கான பேச்சு, கட்டுரை போட்டிகள் முதன்மை கல்வி அலுவலர் தலைமையில் நடந்தது.
திருவண்ணாமலை,
திருவண்ணாமலை மாவட்டத்தில் பெண் குழந்தைகளைக் காப்போம், பெண் குழந்தைகளுக்குக் கற்பிப்போம் என்ற திட்டம் மூலம் அனைத்து பள்ளிகளிலும் பேச்சு, கட்டுரை மற்றும் ஓவிய போட்டிகள் நடத்தப்பட்டன. அதைத்தொடர்ந்து பள்ளி அளவில் முதலிடம் பெற்ற மாணவ- மாணவிகளுக்கு திருவண்ணாமலை தியாகி அண்ணாமலை பிள்ளை அரசு மேல்நிலைப் பள்ளியில் மாவட்ட அளவிலான பேச்சு, கட்டுரை மற்றும் ஓவிய போட்டிகள் நடந்தது.
போட்டிக்கான தொடக்க நிகழ்ச்சிக்கு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஜெயக்குமார் தலைமை தாங்கினார். திருவண்ணாமலை மாவட்ட கல்வி அலுவலர் அருள்செல்வம், முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர்கள் அன்பழகன், ரேணுகோபால், பள்ளியின் தலைமை ஆசிரியர் பி.சேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கரிக்கலாம்பாடி அரசு உயர்நிலை பள்ளி ஆங்கில பட்டதாரி ஆசிரியை சுமித்ராதேவி வரவேற்றார்.
போட்டிகளில் 114 மாணவ- மாணவிகள் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிக்காட்டினர்.
பேச்சுப்போட்டியில் ஐங்குணம் அரசு மேல்நிலைப் பள்ளி 9-ம் வகுப்பு மாணவி தீபிகா முதலிடத்தையும், பவித்ரம் புனித அந்தோணியார் பெண்கள் மேல்நிலைப் பள்ளி 9-ம் வகுப்பு மாணவி பி.சுபலட்சுமி 2-ம் இடமும், ஆனந்தல் அரசு உயர்நிலை பள்ளியின் 8-ம் வகுப்பு மாணவி எஸ்.பவித்ராதேவி 3-ம் இடமும் பிடித்தனர்.
ஓவிய போட்டியில் இனாம்காரியந்தல் அரசு உயர்நிலை பள்ளியின் 6-ம் வகுப்பு மாணவி எஸ்.சுவேதா முதலிடமும், செங்கம் அரசு மகளிர் மேல்நிலை பள்ளியின் 9-ம் வகுப்பு மாணவி ஈ.இளவரசி 2-ம் இடமும், கரிக்கலாம்பாடி அரசு உயர்நிலைப் பள்ளியின் 8-ம் வகுப்பு மாணவி எம்.ரோகிணி 3-ம் இடமும் பிடித்தனர்.
கட்டுரை போட்டியில் வேட்டவலம் புனித அலோசியஸ் பெண்கள் மேல்நிலைப் பள்ளி 8-ம் வகுப்பு மாணவி மேனகா முதலிடமும், பவித்ரம் புனித அந்தோணியார் பெண்கள் மேல்நிலைப் பள்ளி 9-ம் வகுப்பு மாணவி பி.மோனிகா 2-ம் இடமும், மேலத்தாங்கல் அரசு உயர்நிலைப் பள்ளி 9-ம் வகுப்பு மாணவி புவனேஸ்வரி 3-ம் இடமும் பிடித்தனர்.
இவர்களை முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் 11 பேர் நடுவர்களாக பங்கேற்று தேர்வு செய்தனர். வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட உள்ளது.