தாய்–தந்தையின் ஆசை குறித்து உருக்கமாக கட்டுரை எழுதிய மாணவி வீடு தேடி சென்று கலெக்டர் உதவி

தாய் – தந்தையின் ஆசை குறித்து உருக்கமாக கட்டுரை எழுதிய மாணவியின் வீட்டுக்கு நேரில் சென்று அவரது கோரிக்கையை கலெக்டர் கந்தசாமி நிறைவேற்றினார்.

Update: 2018-11-29 22:15 GMT

செய்யாறு, 

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு தாலுகா நெடுங்கல் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் அதே கிராமத்தை சேர்ந்த செல்லபெருமாள் என்பவரின் மகள் ரூபிகா 8–ம் வகுப்பு படித்து வருகிறாள். பள்ளியில் தமிழ் பாடம் தொடர்பாக மாணவர்கள் தனித்தனியாக கட்டுரை எழுதும் பயிற்சி அளிக்க தலைமை ஆசிரியை சுடர்கொடி, மாணவர்களிடம் தன்னுடைய தந்தையை பற்றி எழுதிட கூறியுள்ளார்.

இதனையடுத்து மாணவர்கள், தங்களுடைய தந்தையை பற்றி எழுதி தலைமை ஆசிரியையிடம் வழங்கியுள்ளனர். இதில் மாணவி ரூபிகா எழுதிய கட்டுரை உருக்கமாக இருந்ததால் அதனை தன்னுடைய செல்போனில் பதிவு செய்துள்ளார்.

அந்த வீடியோ பதிவில் மாணவி ரூபிகா தன்னுடைய தந்தை செல்லபெருமாள் மீது வைத்துள்ள அன்பு மிகுதியால் கண்ணீர் மல்க தந்தையின் குணத்தை பற்றியும், அவரின் ஆசைப்பற்றியும் கூறுகையில், ‘என் அப்பா எங்களுக்காக என்ன வேண்டுமென்றாலும் வாங்கி தருவார். கூலிக்கு ஆடு மேய்கிறார். மேலும் சென்னையை சேர்ந்தவருக்கு சொந்தமான மாந்தோப்பு பண்ணையை பராமரித்து வருகிறார். என் தந்தை படிக்கவில்லை என்றாலும் அன்பும், அறிவும் அதிகமாக இருக்கிறது. எங்க அப்பா அடுத்தவங்க பொருளுக்கு ஆசைப்படமாட்டார், திருடமாட்டார். வீட்டில் பணம் இருந்தாலும் சொல்லிவிட்டுதான் எடுப்பார். என் அப்பா, அம்மாவிற்கு சொந்தமாக ஆடு மேய்க்கனும் என ஆசை இருக்கிறது’ என்றாள்.

இந்த வீடியோ பதிவு ‘வாட்ஸ் அப்’ மூலமாக ஆசிரியர்கள் மத்தியில் பரவியுள்ளது. நாளடைவில் அந்த ‘வாட்ஸ் அப்’ பதிவு கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி செல்போனுக்கு அனுப்பப்பட்டுள்ளது. இதனை பார்த்த கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி நேரடியாக வருவாய்த்துறையினரை மாணவி ரூபிகா வீட்டிற்கு நேரில் சென்று விசாரித்து அறிக்கை அனுப்பிட உத்தரவிட்டார். அதன்படி அதிகாரிகளும் அறிக்கை அனுப்பினர்.

அதை தொடர்ந்து கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி, மாணவி ரூபிகா வீட்டிற்கு நேரில் சென்று, மாணவியிடம் உன்னுடைய தந்தை எங்கே என கேட்டார். அவரிடம் தனது தந்தை செல்லபெருமாளை மாணவி ரூபிகா அறிமுகப்படுத்திய போது, உங்களது மகள் உங்கள் மீது மிகுந்த அன்பு வைத்துள்ளார் என கூறிவிட்டு, மாணவியிடம் உன் தந்தையின் ஆசையை நிறைவேற்றி தருகிறோம் என்றார்.

பின்னர் கலெக்டர் விருப்புரிமை நிதியில் இருந்து ரூ.30 ஆயிரம் மதிப்பில் 5 ஆடுகளை மாணவி ரூபிகா மற்றும் குடும்பத்தாரிடம் கலெக்டர் வழங்கினார். மேலும் ரூ.2 லட்சத்து 10 ஆயிரம் மதிப்பில் பசுமை வீடு திட்டத்தில் சொந்தமாக வீடு கட்ட உத்தரவு ஆணையையும் வழங்கினார்.

ஆடுகளை பார்த்த மாணவி ரூபிகா மற்றும் குடும்பத்தினர் நெகிழ்ச்சி அடைந்து கலெக்டர் கே.எஸ்.கந்தசாமிக்கு நன்றி தெரிவித்தனர்.

இதே போல வெம்பாக்கம் கிராமத்தில் இருளர் இனத்தை சேர்ந்த மாணவி செல்வி தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி. நர்சிங் படிக்க இடம் கிடைத்தும், பணம் செலுத்த முடியாத நிலையில் கடந்த 22–ந் தேதி குறைதீர்வு கூட்டத்தில் கலெக்டரிடம் கோரிக்கை வைத்திருந்தார். அதை தொடர்ந்து, அந்த மாணவியின் வீட்டிற்கு சென்று மாணவி செல்வியை சந்தித்து 4 ஆண்டு நர்சிங் பாடப்பிரிவில் படிக்கவும், தங்கும் விடுதி கட்டணம் உள்பட ரூ.1 லட்சத்து 90 ஆயிரத்திற்கான காசோலையை வழங்கி நன்றாக படிக்க வேண்டும் என அறிவுரை கூறினார்.

அப்போது செய்யாறு உதவி கலெக்டர் அன்னம்மாள், தாசில்தார்கள் மகேந்திரமணி (செய்யாறு), சுப்பிரமணியன் (வெம்பாக்கம்), வட்டார வளர்ச்சி அலுவலர்கள் செந்தில்குமாரி, பாரி, பரணிதரன், கோபாலகிருஷ்ணன் ஆகியோர் உடனிருந்தனர்.

மேலும் செய்திகள்