பாளையங்கோட்டையில் சாலையில் தறிகெட்டு ஓடிய ஆட்டோ மோதி விபத்து மாணவிகள் உள்பட 6 பேர் படுகாயம்

பாளையங்கோட்டையில் சாலையில் தறிகெட்டு ஓடிய ஆட்டோ மோதி பள்ளி மாணவிகள் உள்பட 6 பேர் காயம் அடைந்தனர்.

Update: 2018-11-29 08:10 GMT
நெல்லை, 

பாளையங்கோட்டையில் சாலையில் தறிகெட்டு ஓடிய ஆட்டோ மோதி பள்ளி மாணவிகள் உள்பட 6 பேர் காயம் அடைந்தனர்.

ஆட்டோ மோதல்

பாளையங்கோட்டை அருகே உள்ள கீழநத்தம் வடக்கு தெருவை சேர்ந்தவர் தவிடன். அவருடைய மகன் அன்புராஜன்(வயது41). ஆட்டோ டிரைவர். இவர் நேற்று மாலையில் தனது ஆட்டோவில் பாளையங்கோட்டை மார்க்கெட் பகுதியில் இருந்து புதிய பஸ்நிலையத்திற்கு சென்று கொண்டு இருந்தார். வாய்க்கால் பாலம் பஸ்நிறுத்தம் அருகே வந்தபோது அதி வேகமாக ஆட்டோ தறிக்கெட்டு ஓடியது. அப்போது வாய்கால்பாலம் பஸ்நிறுத்தத்தில் நின்ற பள்ளி மாணவிகள் 4 பேர் மீது மோதிவிட்டு, அங்குள்ள ஆஸ்பத்திரிக்கு செல்கின்ற வழியில் நின்ற 2 பேர் மீதும் மோதிவிட்டு நிற்காமல் ஓடிக் கொண்டிருந்தது. அக்கம்பக்கத்தினர் விரட்டி சென்று ஆட்டோவை மடக்கி பிடித்தனர்.

இந்தநிலையில் ஆட்டோ மோதியதில் படுகாயம் அடைந்து ரத்தவெள்ளத்தில் கிடந்த 6 பேரையும் ஆம்புலன்ஸ் மூலம் பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

6 பேர் காயம்

இந்த விபத்தில் நடுதிடீயூரை சேர்ந்த இசக்கிமுத்து மகள்கள் வேணி(13), துர்கா தேவி(12) மற்றும் கீர்த்தனா(14), நம்பியம்மாள்(12). இவர்கள் 4 பேரும் அங்குள்ள ஒரு பள்ளிக்கூடத்தில் படித்து வருகிறார்கள். இவர்கள் பஸ்சுக்காக நின்றபோது இந்த ஆட்டோ மோதி காயம் அடைந்து உள்ளனர். மேலும் கழுநீர்குளத்தை சேர்ந்த மல்லிகா(44). பட்டுராஜா ஆகியோரும் காயம் அடைந்தனர். அக்காள் தங்கையான வேணி, துர்காதேவி 2 பேரும் காயம் அடைந்து உள்ளனர். இந்த சம்பவம் நெல்லை பகுதியில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இது குறித்து நெல்லை மாநகர போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழகங்கு பதிவு செய்து ஆட்டோ டிரைவர் அன்புராஜனை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்