பாலிஷ் போட்டு தருவதாக கூறி: மூதாட்டியிடம் 5 பவுன் நகை அபேஸ் - வாலிபருக்கு போலீஸ் வலைவீச்சு
நெய்வேலி அருகே பாலிஷ், போட்டு தருவதாக கூறி மூதாட்டியிடம் 5 பவுன் நகையை அபேஸ் செய்து சென்ற வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.
நெய்வேலி,
நெய்வேலி அருகே உள்ள கீழ் வடக்குத்து பகுதியை சேர்ந்தவர் வேல்முருகன். இவருடைய மனைவி பவுனம்மாள்(வயது 75). சம்பவத்தன்று இவர் தனது வீட்டில் இருந்தார். அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர், வீட்டில் பழைய நகை இருந்தால் தாருங்கள், பாலிஷ் போட்டு தருகிறேன் என்று கூறியுள்ளார். இதையடுத்து பவுனம்மாள், தான் கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் நகையை கழற்றி அந்த வாலிபரிடம் கொடுத்தார். அதைவாங்கிய அந்த வாலிபர், நகையை பாலிஷ் போடுவது போன்று நடித்துள்ளார். பின்னர் அவர் குடிக்க தண்ணீர் தருமாறு பவுனம்மாளிடம் கேட்டுள்ளார்.
இதையடுத்து அவர், வீட்டுக்குள் சென்று தண்ணீர் எடுத்து வந்தார். அதற்குள் அந்த வாலிபர், நகை மற்றும் மோட்டார் சைக்கிளுடன் தப்பி சென்றார். அதன்பிறகு தான் பாலிஷ் போடுவது போல் நடித்து வாலிபர் நகையை அபேஸ் செய்து விட்டு சென்றது பவுனம்மாளுக்கு தெரியவந்தது. நகையின் மதிப்பு ரூ.1 லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது.
இதுகுறித்து பவுனம்மாளின் மகன் சத்தியராஜ் டவுன்ஷிப் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகையை அபேஸ் செய்து சென்ற வாலிபரை தேடி வருகின்றனர்.