ரோமன்ரோலண்ட் நூலகத்தில் உள்ள புத்தகங்கள் குறித்த விவரங்களை இணையதளத்தில் பதிவேற்ற வேண்டும்; கவர்னர் ஆலோசனை
ரோமன் ரோலண்ட் நூலகத்தில் உள்ள புத்தகங்கள் குறித்த விவரங்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்று கவர்னர் கிரண்பெடி ஆலோசனை வழங்கினார்.;
புதுச்சேரி,
புதுவை கவர்னர் கிரண்பெடி நேற்று கலை பண்பாட்டுத்துறை அலுவலகம் மற்றும் ரோமன்ரோலண்ட் நூலகத்தில் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது கலை பண்பாட்டுத்துறை இயக்குனர் கணேசன், கவர்னரின் தனிச்செயலாளர் ஸ்ரீதரன் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.
ஆய்வினை தொடர்ந்து அதிகாரிகளுக்கு கவர்னர் கிரண்பெடி சில ஆலோசனைகளை வழங்கினார். அப்போது அவர் கூறிய ஆலோசனைகள் வருமாறு:–
*அப்போது ரோமன்ரோலண்ட் நூலகம் மற்றும் கிளை நூலகங்களில் உள்ள புத்தகங்கள் குறித்த விவரங்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்யவேண்டும். பொது நூலகங்கள் குறித்த தகவல்களை கல்வித்துறை மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு தெரிவிக்கவேண்டும்.
*கலை பண்பாட்டுத்துறை சார்பில் நடத்தப்படும் வாராந்திர கலை நிகழ்ச்சிகள் குறித்த விவரங்களை இணையதளம் மூலம் தெரிவிக்கவேண்டும். இதுகுறித்த விளம்பர பிரசுரங்களை ஓட்டல்களுக்கு அனுப்பவேண்டும்.
*தாவரவியல் பூங்காவில் உள்ள திறந்தவெளி ஆடிட்டோரியத்தில் வாராந்திர கலை நிகழ்ச்சிகள் நடத்த வேண்டும். இந்த நிகழ்ச்சிகள் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளின் திறமையை மேம்படுத்துவதாக இருக்கவேண்டும்.
*ரோமன்ரோலண்ட் நூலகத்தில் உள்ள புத்தகங்கள் பாதுகாக்கப்பட வேண்டும். நூலகத்தில் படிந்துள்ள தூசிகளை வேக்குவம் கிளீனர் கொண்டு தூய்மைப்படுத்த வேண்டும். நூலக வளாகத்தில் வைக்கப்பட்டுள்ள பழைய பொருட்களை ஏலம்விட்டு அங்கிருந்து அப்புறப்படுத்த வேண்டும்.