ஒருதலைக் காதல்: பெண்கேட்டு மருத்துவ மாணவியின் தாய்க்கு மிரட்டல் - என்ஜினீயரிங் மாணவர் கைது
மருத்துவ மாணவி மீது கொண்ட ஒருதலைக் காதலால், பெண்கேட்டு அவரது தாய்க்கு கொலை மிரட்டல் விடுத்த என்ஜினீயரிங் மாணவரை போலீசார் கைது செய்தனர்.
சிதம்பரம்,
காட்டுமன்னார் கோவில் அருகே உள்ள எள்ளேரி கிராமம் சிவன்கோவில் தெருவை சேர்ந்தவர் சிவபிரகாசம். இவரது மகன் சூர்யா (வயது 19). இவர் சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் என்ஜினீயரிங் 2-ம் ஆண்டு படித்து வருகிறார். இதேபோல் காட்டுமன்னார் கோவிலை சேர்ந்தவர் 19 வயது இளம் பெண். இவர் சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவகல்லூரியில் எம்.பி.பி.எஸ். 2-ம் ஆண்டு படித்து வருகிறார். மருத்துவ கல்லூரி மாணவியை சூர்யா ஒருதலையாக காதலித்து வந்ததாக தெரிகிறது. இந்த நிலையில், சூர்யா தனது சொந்த ஊருக்கு வந்திருந்தார். அப்போது மருத்துவகல்லூரிக்கு அந்த மாணவியை பார்ப்பதற்காக அவர் சிதம்பரம் வந்ததாக தெரிகிறது.
இதற்கிடையே சிதம்பரத்திற்கு அந்த மாணவியின் தாய் வந்திருந்தார். அப்போது, அண்ணாமலை நகரில் உள்ள ராஜேந்திரன் சிலை அருகே அவர் நடந்து வந்து கொண்டிருந்தார். இவரை பார்த்த சூர்யா விரைந்து வந்து, மாணவியின் தாயை வழிமறித்து ‘தான் உங்கள் மகளை காதலித்து வருகிறேன் எனவே எனக்கு திருமணம் செய்து தாருங்கள்’ என்று கூறி பெண்கேட்டுள்ளார்.
இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த மாணவியின் தாய், மறுப்பு தெரிவித்து விட்டு அங்கிருந்து வேகமாக நடந்து சென்றார். இதனால் ஆத்திரமடைந்த சூர்யா மாணவியின் தாயின் கையை பிடித்து இழுத்து, மானபங்கம் செய்ததுடன், கொலை மிரட்டலும் விடுத்துள்ளார்.
இதுகுறித்து மாணவியின் தாய் அண்ணாமலை நகர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் விநாயக முருகன் வழக்குப்பதிவு செய்து சூர்யாவை கைது செய்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.