போலி மருத்துவ சான்றிதழ் சமர்ப்பித்து ரூ.5½ லட்சம் பெற முயன்ற போலீஸ்காரர் கைது

போலி மருத்துவ சான்றிதழ் சமர்ப்பித்து ரூ.5½ லட்சம் பெற முயன்ற போலீஸ்காரர் கைது செய்யப்பட்டார்.

Update: 2018-11-28 22:59 GMT
மும்பை,

மும்பை பாந்திரா நிர்மல் நகர் போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக பணிபுரிந்து வந்தவர் சுனில் தோர்வே (வயது35). இவர் கடந்த 2014-ம் ஆண்டு புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இருந்த தனது மனைவியை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்ததாகவும், இதற்காக ரூ.5 லட்சத்து 50 ஆயிரம் செலவு ஆனதாகவும் கூறி, அந்த தொகையை அனுமதிக்க கோரி மருத்துவ அறிக்கை மற்றும் கட்டண ரசீதுடன் மேற்கு மண்டல கூடுதல் போலீஸ் அலுவலகத்தில் சமர்ப்பித்து இருந்தார்.

அண்மையில் அந்த தொகையை அவருக்கு வழங்குவதற்கு அனுமதி அளிக்கப்பட்டது. அவருக்கு அந்த பணம் கொடுக்கப்பட இருந்த நிலையில், அவர் கொடுத்த மருத்துவ சான்றிதழ்கள் மற்றும் கட்டண ரசீதுகளை அதிகாரிகள் சரிபார்த்தனர்.

மேலும் சுனில் தோர்வேயின் மனைவி அனுமதிக்கப்பட்டு இருந்ததாக கூறப்பட்ட மருத்துவமனையை தொடர்பு கொண்டு விசாரித்தனர். அப்போது, போலீஸ்காரர் மனைவி யாரும் சிகிச்சை பெறவில்லை என தெரிவித்தனர். இதையடுத்து நடத்தப்பட்ட விசாரணையில், போலீஸ்காரர் சுனில் தோர்வே அந்த மருத்துவமனையின் லோேகாவை பயன்படுத்தி போலி மருத்துவ சான்றிதழ்கள் மற்றும் மருத்துவ கட்டண ரசீதுகளை தயார் செய்து மோசடியில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து அவர் மீது நிர்மல் நகர் போலீஸ் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து அவர் அதிரடியாக பணி இடைநீக்கம் செய்யப்பட்டார்.

கைது நடவடிக்கையில் இருந்து தப்பிக்க அவர் முன்ஜாமீன் கோரி கோர்ட்டை அணுகினார். ஆனால் கோர்ட்டு அவரது முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது. இதையடுத்து அவர் போலீசில் சரண் அடைந்தார். போலீசார் அவரை கைது செய்தனர்.

மேலும் செய்திகள்