சாலைவசதி கேட்டு கலெக்டரை முற்றுகையிட்ட கிராம மக்கள்

சாலைவசதி கேட்டு கலெக்டரை கிராம மக்கள் முற்றுகையிட்டனர்.

Update: 2018-11-28 23:00 GMT

பெரியபாளையம்,

திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே உள்ள மெய்யூர் ஊராட்சியை சேர்ந்த வேம்பேடு கிராமத்தில் வசித்து வரும் இருளர் இன மக்களுக்கு இல்லம் தேடி சாதி சான்றிதழ் வழங்கும் திட்டத்தின் கீழ் இந்த கிராமத்தில் வசித்து வரும் 26 குடும்பத்தை சேர்ந்த 94 பேருக்கு இருளர் இனசான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு ஊத்துக்கோட்டை தாசில்தார் இளங்கோவன் தலைமை தாங்கினார். தனி தாசில்தார் லதா, வருவாய் ஆய்வாளர் ரவி, பூண்டி வட்டார வளர்ச்சி அதிகாரி வெங்கடேசன், முன்னாள் ஊராட்சிமன்ற தலைவர் மதன்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சிறப்பு அழைப்பாளர்களாக திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார், சப்–கலெக்டர் சித்ரா ஆகியோர் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு சாதி சான்றிதழ் மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினர்.

அதன்பின்னர், பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை கலெக்டர் பெற்றுக்கொண்டார். அப்போது கிராமமக்கள் தங்களது ஊருக்கு சாலை வசதி, பஸ் வசதி, மின் விளக்கு வசதி செய்து தர வேண்டும் எனறு கோரிக்கை விடுத்து கலெக்டரை முற்றுகையிட்டனர்.

சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் பேசி பஸ் வசதி, மின் விளக்கு வசதி, சாலை வசதி போன்றவற்றை செய்து தருவதாக பொதுமக்களுக்கு கலெக்டர் உறுதி அளித்தார்.

இதையடுத்து அவர்கள் அங்கிருந்து கலைந்து செனறனர். முன்னதாக அனைவரையும் வருவாய் ஆய்வாளர் ஆதிலட்சுமி வரவேற்றார். முடிவில் கிராம நிர்வாக அதிகாரி மணிகண்டன் நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்