பேரம்பாக்கத்தில் ஆட்டோவில் பேட்டரிகள் திருடிய வாலிபர் கைது
பேரம்பாக்கத்தில் ஆட்டோவில் பேட்டரிகள் திருடியவரை போலீசார் கைது செய்தனர்.
திருவள்ளூர்,
வேலூர் மாவட்டம் அரக்கோணம் தாலுகா அணைகட்டாபுத்தூர் கிராமம் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் பரமசிவம் (வயது 44). இவர் தனக்கு சொந்தமான ஆட்டோவை கடந்த 15–ந் தேதி பேரம்பாக்கத்தில் உள்ள கடைக்கு பழுது பார்ப்பதற்கு கொண்டு வந்து விட்டு சென்றார்.
பின்னர் அவர் தன் ஆட்டோவை எடுத்து செல்ல வந்தபோது அதில் இருந்த ரூ.5 ஆயிரம் மதிப்புள்ள பேட்டரிகள் திருட்டு போனது தெரியவந்தது.
இதுகுறித்து பரமசிவம் மப்பேடு போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் பேட்டரிகளை திருடியது பேரம்பாக்கம் மேலாண்ட தெருவை சேர்ந்த ஜான் (28) என்பது தெரியவந்தது. போலீசார் அவரை கைது செய்து அவரிடம் இருந்த பேட்டரிகளை பறிமுதல் செய்தனர்.