58 கிராம கால்வாயில் கலெக்டர் ஆய்வு

உசிலம்பட்டி பகுதியில் உள்ள 58 கிராம கால்வாயில் மீண்டும் தண்ணீர் திறப்பது தொடர்பாக கலெக்டர் நடராஜன் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

Update: 2018-11-28 22:21 GMT

உசிலம்பட்டி,

உசிலம்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராம விவசாயிகள் பயன்பெறும் வகையில் பல்வேறு கட்ட போராட்டங்களுக்கு பிறகு 58 கிராம கால்வாய் திட்டம் செயல்படுத்தப்பட்டது. தற்போது கால்வாய் பணிகள் முடிவடைந்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு சோதனை ஓட்டம் நடைபெற்றது. அப்போது சில இடங்களில் உடைப்பு ஏற்பட்டதை தொடர்ந்து அவை சீரமைக்கும் பணி நடந்து வந்தது. தற்போது அந்த சீரமைப்பு பணியும் முடிவடைந்தது. இதனால் மீண்டும் கால்வாயில் சோதனை ஓட்டம் நடத்தி, முழுமையாக விவசாயிகளுக்கு தண்ணீர் கிடைக்கும் வகையில் கால்வாயில் தண்ணீர் திறந்துவிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல்வேறு அமைப்பினர் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில் உசிலம்பட்டி அருகே கட்டப்பட்டுள்ள 58 கிராம கால்வாய் திட்டத்தை மாவட்ட கலெக்டர் நடராஜன் நேற்று திடீரென ஆய்வு செய்து பார்வையிட்டார். இந்த ஆய்வின்போது மீண்டும் கால்வாயில் தண்ணீர் திறக்க நடவடிக்கை எடுப்பது குறித்தும், இந்த கால்வாய்க்கு ஒதுக்கப்பட்ட 306 கன அடி தண்ணீர் திறந்துவிட்டால் 32 கண்மாய்களும் நிரம்ப எந்தனை நாட்கள் ஆகும் என்பது குறித்தும் பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

அதன் பின்னர் அங்கு கட்டப்பட்டுள்ள தொட்டி பாலம் மற்றும் கால்வாய் கரைகளை கலெக்டர் ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது உசிலம்பட்டி தாசில்தார் நவநீதகிருஷ்ணன், துணை தாசில்தார் ராஜன், ஆணையாளர்கள் இளங்கோவன், பாலகிருஷ்ணன், உசிலம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் மாடசாமி மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.

மேலும் செய்திகள்