தாராபுரம் பகுதியில் விளைநிலங்களில் உயர் அழுத்த மின்கோபுரம் அமைக்க எதிர்ப்பு வருகிற 17–ந்தேதி முதல் விவசாயிகள் காத்திருப்பு போராட்டம்
தாராபுரம் பகுதியில் விளைநிலங்களில் உயர்அழுத்த மின்கோபுரம் அமைக்க விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். வருகிற 17–ந்தேதி முதல் காத்திருப்பு போராட்டம் நடத்த முடிவு செய்து உள்ளனர்.
தாராபுரம்,
பஞ்சாப் மாநிலத்தில் இருந்து தமிழகம் வரை 600 முதல் 800 மெகாவாட் வரையிலான உயர் அழுத்த மின்பாதை அமைக்கும் திட்டம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்டது. பல மாநிலங்களில் இந்த திட்டத்திற்கான பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. தமிழகத்தை பொருத்தவரையில் இந்த திட்டத்திற்கு விவசாயிகள் கடுமையான எதிர்ப்பை தெரிவித்து வருகிறார்கள். காரணம். உயர் மின் அழுத்த பாதை அமைப்பதற்கு, விளை நிலங்களில் கோபுரங்கள் அமைக்கப்படுகிறது.
இந்த கோபுரங்களில் பொருத்தப்படும் மின் கம்பிகள் எவ்வளவு அகலத்திற்கு போடப்படுகிறதோ, அதிலிருந்து பக்கவாட்டில் இடதுபுறம் 50 அடி தூரமும், வலது புறம் 50 அடி தூரமும் உள்ள விளை நிலங்களை அரசு கையகப்படுத்தி கொள்ளும். ஒரு கோபுரத்திற்கும், அடுத்துள்ள மற்ற கோபுரத்திற்கும் இடையே உள்ள நிலத்தின் அளவு சுமார் 6 ஏக்கர் ஆகும். இந்த நிலத்தில் வீடுகள் கட்டவோ, கோழிப்பண்ணைகள் அமைக்கவோ, பட்டுப்பூச்சி வளர்ப்பதோ, கால்நடைகளுக்கு கொட்டகைகள் போடவோ இப்படி எதுவுமே செய்ய முடியாது. மேலே செல்லும் உயர் அழுத்த மின் சக்தியானது பூமி வரை பரவும் என்பதால் அந்த நிலத்தில் சாகுபடி செய்ய வாய்ப்பில்லை என்கிறார்கள் விவசாயிகள். அரசு கையகப்படுத்திய விளை நிலங்களுக்கு உரிய மதிப்பு தொகை வழங்கப்படுமா என்றால், சந்தை மதிப்பில் 15 சதவீதம் மட்டுமே வழங்குவதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
திருப்பூர் மாவட்டத்தை பொருத்தவரை, தாராபுரம் மற்றும் காங்கேயம் ஆகிய தாலுகாக்கள் வறட்சியான பகுதிகள். அமராவதி மற்றும் பி.ஏ.பி ஆயக்கட்டு பாசனத்தில் உள்ள நிலங்களை தவிர மற்ற நிலங்கள் அனைத்தும் மானாவாரி நிலங்களாகத்தான் உள்ளது. இந்த பகுதியில் போதுமான அளவு மழையில்லாததால். மானாவாரி சாகுபடியும் செய்ய முடியாத நிலை இருந்து வருகிறது. விவசாயிகள் பொட்டல் காடுகளை நம்பி தான் கால்நடைகளை வளர்த்து தங்கள் வாழ்வாதாரத்தை தக்க வைத்துள்ளனர்.
இந்த நிலையில் இப்பகுதியில் உள்ள சிறு, குறு விவசாயிகளின் விளை நிலங்களை கையகப்படுத்தி, அதன் நடுவே உயர் அழுத்த மின்கோபுரங்களை அமைத்து, மின் பாதை ஏற்படுத்தினால். சிறு, குறு விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. இதனால் தாராபுரம் பகுதி விவசாயிகள் விளை நிலங்களில் உயர் அழுத்த மின்கோபுரம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.
இது குறித்து தமிழக கட்சிசார்பற்ற விவசாயிகள் சங்கத்தின் மாநில தலைவர் காளிமுத்து கூறியதாவது:–
உயர் அழுத்த மின் பாதை திட்டத்திற்கு விவசாயிகளோ, விவசாய சங்கங்களோ யாரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. நாங்கள் இந்த திட்டத்தை வரவேற்கிறோம். ஆனால் இந்த திட்டத்தின் செயல் முறையை மாற்றி அமைக்க வேண்டும் என்பதுதான் எங்களுடைய கோரிக்கை ஆகும். தமிழகத்தில் 13 மாவட்டங்களை இணைத்து விளை நிலங்கள் வழியாக இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது. அதற்காக விளை நிலங்களில் மின் கோபுரங்கள் அமைக்கப்படுகிறது. மின் கம்பிகளுக்கு கீழே உள்ள நிலத்தை விவசாயிகள் பயன்படுத்த முடியாது. இதனால் பல லட்சம் ஏக்கர் விளை நிலம் பாதிக்கப்படும். எனவே இந்த திட்டத்தில் விளை நிலங்களில் மின் கோபுரங்கள் அமைத்து மின் பாதை ஏற்படுத்துவதை கைவிட்டு, பூமிக்கு அடியில் சுமார் 10 அடி ஆழத்திற்கு குழி தோண்டி, கேபிள்களை பதித்து மின் பாதை அமைக்கலாம். அவ்வாறு திட்டத்தை மாற்றி அமைத்தால், விவசாயிகள் எப்போதும் போல் விவசாயத்தை தொடர்ந்து செய்வதற்கு வாய்ப்பிருக்கிறது. வீடுகளை இழக்கவோ, பண்ணைகள் அமைக்கவோ இடையூறு இருக்காது இந்த கோரிக்கையை அரசு ஏற்பதாக தெரியவில்லை.
தற்போது தாராபுரம் அருகே நொச்சிப்பாளையம் பகுதியில் சுமார் 20 ஏக்கர் பரப்பளவில் உள்ள நிலத்தில், மின் கோபுரங்கள் அமைப்பதற்கான உதிரி பாகங்கள் வெளி மாநிலங்களில் இருந்து கொண்டுவந்து இறக்கி வைத்துள்ளனர். விரைவில் மின் கோபுரங்கள் இந்த பகுதியில் தொடங்க உள்ளனர். அனைத்து விவசாய சங்கங்களும் ஒன்றிணைந்து அடுத்த மாதம் (டிசம்பர்) 17–ந்தேதி பல்லடம் அருகே உள்ள கள்ளிப்பாளையத்தில் தொடர் காத்திருப்பு போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.