பள்ளியை சுற்றி கழிவுநீர் தேங்கி நிற்பதால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதாக கூறி பெற்றோருடன், மாணவ– மாணவிகள் சாலைமறியல்
திருப்பூரில் மாநகராட்சி பள்ளியை சுற்றி, கழிவு நீர்தேங்கி நிற்பதால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதாக கூறி, பெற்றோருடன் மாணவ–மாணவிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
அனுப்பர்பாளையம்,
திருப்பூர் அங்கேரிபாளையம் மாநகராட்சி தொடக்கப்பள்ளியின் புதிய கட்டிடத்தில் 3 முதல் 5–ம் வகுப்பு வரை 300–க்கும் மேற்பட்ட மாணவ–மாணவிகள் படித்து வருகின்றனர். பள்ளியின் சுற்றுச்சுவரை ஒட்டி மாநகராட்சி சார்பில் சாக்கடை கால்வாய் அமைக்கப்பட்டுள்ளது.
அந்த கால்வாய் முறையாக கட்டப்படாததால் கழிவுநீர் எளிதாக வெளியேறாமல் தேங்கி நிற்கிறது. இதனால் கொசு உற்பத்தியாகி வருகிறது. இதேபோல் பள்ளியை ஒட்டி அந்த பகுதியை சேர்ந்த குப்பைகள் கொட்டப்பட்டுள்ளது. இதனால் அங்கு கடுமையான துர்நாற்றம் வீசுகிறது. பள்ளியை சுற்றி குப்பையும், கழிவுநீரும் தேங்கி இருப்பதால் அந்த பகுதியில் சுகாதார சீர்கேடு நிலவுவதுடன், மாணவ–மாணவிகளுக்கு தொற்று நோய் ஏற்படும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.
இந்த பிரச்சினைக்கு தீர்வு காண வலியுறுத்தி மாணவ–மாணவிகளின் பெற்றோர் பள்ளி அருகே திரண்டனர். பின்னர் நேற்று மாலை பள்ளி முடிந்ததும் பள்ளியில் படிக்கும் குழந்தைகள் 30–க்கும் மேற்பட்டோர் பெற்றோருடன் சேர்ந்து பள்ளியை சுற்றி நிலவும் சுகாதார சீர்கேட்டிற்கு தீர்வு காணகோரி அங்கேரிபாளையம் ரோட்டில் திடீர் சாலைமறியலில் ஈடுபட்டனர். அப்போது அங்கு சென்ற சமூக ஆர்வலர் ஒருவர் பெற்றோரிடம் பேச்சுவார்த்தை நடத்தி அதிகாரிகளிடம் மனு கொடுத்து பிரச்சினைக்கு தீர்வு காணலாம் என்றும், சாலைமறியல் செய்ய வேண்டாம் என்றும் கேட்டு கொண்டார். இதன்பேரில் குழந்தைகளும் பெற்றோரும் சாலைமறியலை கைவிட்டு சாலையோரம் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவலறிந்த அனுப்பர்பாளையம் போலீசார் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் பெற்றோரிடம் பேச்சுவார்தை நடத்திய அதிகாரிகள் உடனடியாக பள்ளி அருகில் குவிந்துள்ள குப்பை அகற்றப்படும் என்றும், கால்வாயில் கழிவுநீர் தேங்காமல் இருக்க உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதியளித்தனர். இதையடுத்து குழந்தைகளும், பெற்றோரும் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவம் காரணமாக அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டதுடன், போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது.