கோவை சுல்தான்பேட்டையில் நடக்கும் விவசாயிகளின் உண்ணாவிரத போராட்டத்துக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு ஆதரவு

கோவை சுல்தான்பேட்டையில் நடைபெறவுள்ள விவசாயிகளின் உண்ணாவிரத போராட்டத்துக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு ஆதரவு அளித்துள்ளது.

Update: 2018-11-28 22:01 GMT

திருப்பூர்,

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் திருப்பூர் மாவட்ட செயலாளர் முத்துக்கண்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–

கோவை மாவட்டம் காட்டம்பட்டியில் விவசாய நிலங்கள் வழியாக உயர் மின்கோபுரம் அமைப்பதற்கு அதிகாரிகள் நில அளவைக்கு வந்துள்ளனர். இதற்கு ஆட்சேபனை தெரிவித்த விவசாயிகளை காவல்துறையை கொண்டு மிரட்டியதுடன், அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த அதிகாரிகள் முன்வரவில்லை. இதனால் மறியலில் ஈடுபட்ட விவசாயிகளை கைது செய்துள்ளனர்.

இந்த சம்பவத்தை கண்டித்து கோவை மாவட்டம் சுல்தான்பேட்டையில் விவசாயிகள் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கியுள்ளதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி ஆதரவு தெரிவித்துக்கொள்கிறது. விவசாயிகளின் வாழ்வாதார பிரச்சினையில் அடக்குமுறையை ஏவி விவசாயிகளை அடிபணிய செய்வதற்கு அரசு நிர்வாகம் முயற்சி மேற்கொண்டிருப்பதை கைவிட வேண்டும். விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று நியாயமான போராட்டத்தை சுமூகமான முறையில் தீர்வு காண அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அந்த அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்