காதல் பிரச்சினையில் மாணவி தற்கொலை: உடலை வாங்க மறுத்து உறவினர்கள் திடீர் மறியல்

காதல் பிரச்சினையில் இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில் உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி அவரது உறவினர்கள் மற்றும் மாதர் சங்கத்தினர் சிவகங்கையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Update: 2018-11-28 23:00 GMT
சிவகங்கை,

சிவகங்கை அருகே உள்ள பாகனேரியைச் சேர்ந்தவர் பாண்டியன். இவரது மகள் பிருந்தா (வயது 22). இவர் கல்லலில் உள்ள தனியார் நர்சிங் கல்லூரியில் படித்து வந்தார். இவரும், அதே ஊரைச் சேர்ந்த அசோக் என்ற வாலிபரை கடந்த 5 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர்.

இந்த காதலுக்கு ஒரு தரப்பினர் சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த விவகாரம் குறித்து ஏற்கனவே மதகுபட்டி, சிவகங்கை மகளிர் போலீசில் புகார்கள் அளிக்கப்பட்டன.

இந்த நிலையில் மாணவி பிருந்தா கடந்த 24-ந்தேதி தேதி எலி மருந்தை தின்று தற்கொலைக்கு முயன்றார். அவரை சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி பிருந்தா பரிதாபமாக இறந்து போனார்.

இந்த சம்பவத்தை தொடர்ந்து மாணவியின் இறப்புக்கு காரணமானவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி சிவகங்கை மருத்துவமனை அருகில் மானாமதுரை சாலையில் மாணவியின் உறவினர்கள் மற்றும் ஜனநாயக மாதர் சங்கத்தினர் திடீர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்ததும் சிவகங்கை தாசில்தார் ராஜா, துணை போலீஸ் சூப்பிரண்டு அப்துல்கபூர், இன்ஸ்பெக்டர் அழகர் ஆகியோர் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

மாணவி பிருந்தாவின் தற்கொலைக்கு காரணமானவர்களை கைது செய்து நடவடிக்கை எடுத்தால் தான் மாணவியின் உடலை வாங்கி செல்வோம் என்று மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர். உரிய நடவடிக்கை எடுப்பதாக போலீசார் அவர்களை சமாதானப்படுத்தினர்.

ஆனால் கைது நடவடிக்கை மேற்கொண்டதற்கு பின்பு உடலை வாங்கிச் செல்வதாக கூறிவிட்டு உறவினர்கள் கலைந்து சென்று விட்டனர். இதனால் மாணவியின் உடல் அரசு மருத்துவமனையின் பிணவறையிலேயே வைக்கப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்