கட்டி முடிக்கப்பட்டு பல மாதங்களாகியும் வாகன காப்பக அடுக்குமாடி கட்டிடம் திறக்கப்படாத நிலை

காரைக்குடி புதிய பஸ் நிலையத்தில் புதிதாக ரூ.2.6 கோடி மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்ட வாகன காப்பக அடுக்குமாடி கட்டிடம் பல மாதங்களாகியும் திறக்கப்படாமல் உள்ளது.

Update: 2018-11-28 22:45 GMT
காரைக்குடி,

காரைக்குடி புதிய பஸ் நிலையத்தில் நகராட்சி சார்பில் அடுக்குமாடி வாகன காப்பக கட்டிடம் ரூ.2.6 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டது. இந்த நிலையில் இந்த கட்டிடம் கட்டப்பட்டு பல மாதங்களாகியும் இதுவரை திறக்கப்படாமல் உள்ளது.

இந்த அடுக்குமாடி வாகன காப்பக கட்டிடத்தை கட்டுவதற்காக ஏற்கனவே இங்கு இயங்கி வந்த வாகன காப்பகம் பஸ் நிலையத்தின் எதிரே தற்காலிகமாக கொட்டகை அமைக்கப்பட்டு இயங்கி வந்தது.

இந்த நிலையில் கஜா புயல் காரணமாக இந்த கொட்டகை அடியோடு சாய்ந்தது. இதையடுத்து இங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பல லட்சம் மதிப்பிலான மோட்டார் சைக்கிள்கள் சேதமடைந்தன.

இது தவிர மற்ற நாட்களில் இங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் இரு சக்கர வாகனங்கள் மழையில் நனைந்து துருப்பிடிக்கும் நிலையும் இருந்து வருகிறது.

இந்த நிலையில் இங்கு கட்டப்பட்ட இந்த அடுக்குமாடி வாகன காப்பகத்தை முன்கூட்டியே திறந்திருந்தால் இந்த புயல் பாதிப்பில் இருந்து இந்த மோட்டார் சைக்கிள்கள் மீட்கப்பட்டிருக்கும். பொதுமக்களின் பயன்பாட்டிற்காக கட்டப்பட்ட இந்த வாகன காப்பகம் இதுவரை திறக்கப்படாமல் உள்ளதால் பஸ் நிலையத்தில் வாகனத்தை நிறுத்த வரும் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.

எனவே இனியும் காலம் தாழ்த்தாமல் இந்த புதிய வாகன காப்பக கட்டிடத்தை உடனடியாக திறந்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்று சம்பந்தப்பட்ட நகராட்சித் துறை அதிகாரிகளுக்கு பொதுமக்கள் தரப்பில் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்