சிறுமி பாலியல் பலாத்காரம்: தொழிலாளிக்கு 12 ஆண்டு சிறை - கடலூர் கோர்ட்டு தீர்ப்பு

செல்போனில் ஆபாச படத்தை காட்டி 14-வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த தொழிலாளிக்கு 12 ஆண்டு சிறை தண்டனை விதித்து கடலூர் மகளிர் கோர்ட்டு தீர்ப்பளித்தது.

Update: 2018-11-28 22:00 GMT
கடலூர், 

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே உள்ள ஆதண்டார்கொல்லை ஏரிக்கரை தெருவை சேர்ந்தவர் குமார்(வயது 46) தொழிலாளி. கடந்த 28-7-2017 அன்று மதியம் குமாருக்கும், அவரது மனைவி தமிழரசிக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் கணவரின் அடி-உதைக்கு அஞ்சிய தமிழரசி அங்கிருந்து தப்பி ஓடி பக்கத்தில் உள்ள வீட்டில் மறைந்து இருந்தார். சில நிமிடங்களுக்கு பிறகு அவர் அதே வீட்டில் சிறுவயதிலேயே தாய், தந்தையரை இழந்து சித்தி-சித்தப்பாவின் பராமரிப்பில் வளர்ந்து வந்த 14 வயது சிறுமியை தனது வீட்டுக்கு சென்று குமார் என்ன செய்கிறார் என்று பார்த்து வரும்படி அனுப்பி வைத்தார்.

இதையடுத்து அந்த சிறுமி தமிழரசியின் வீட்டுக்கு சென்றார். அப்போது அங்கே தொலைக்காட்சியை பார்த்துக்கொண்டிருந்த குமார் சிறுமியிடம் உனக்கு செல்போனில் படம் காண்பிக்கிறேன் என்று கூறி அவளை அருகில் வரவழைத்தார். கள்ளம் கபடம் இல்லாத சிறுமி காம போதையில் இருந்த குமாருக்கு அருகில் சென்றார். அப்போது அவர் தனது செல்போனில் ஆபாச படத்தை சிறுமியிடம் காண்பித்து அவளது வாயில் துணியை அமுக்கி பலாத்காரம் செய்தார். பின்னர் இந்த சம்பவத்தை யாரிடமாவது கூறினால் கொலை செய்து விடுவேன் என்று கூறினார். ஆனால் தனக்கு நேர்ந்த பாலியல் வன்கொடுமை பற்றி பக்கத்து வீட்டை சேர்ந்த பெண் ஒருவரிடம் சிறுமி கூறி கதறி அழுதாள்.

இது குறித்து நெய்வேலி தெர்மல் போலீசில் புகார் கொடுக்கப்பட்டது. அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவுசெய்து குமாரை கைது செய்து அவர் மீது கடலூர் மகளிர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். நேற்று இந்த வழக்கில் தீர்ப்பு கூறப்பட்டது. குற்றம் சுமத்தப்பட்ட குமாருக்கு 12 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.15 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி லிங்கேஸ்வரன் தீர்ப்பளித்தார்.

இதையடுத்து குமாரை பலத்த பாதுகாப்புடன் அழைத்து சென்று கடலூர் மத்திய சிறையில் போலீசார் அடைத்தனர். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் செல்வபிரியா ஆஜர் ஆனார்.

மேலும் செய்திகள்