கோவையில்: ஆன்லைன் பணிகளை புறக்கணித்து கிராம நிர்வாக அலுவலர்கள் போராட்டம் - சான்றிதழ் வழங்கும் பணி பாதிப்பு

கோவையில் ஆன்லைன் பணிகளை புறக்கணித்து கிராம நிர்வாக அலுவலர்கள் போராட்டம் நடத்தினர். இதனால் சான்றிதழ் வழங்கும் பணி பாதிக்கப்பட்டது.

Update: 2018-11-28 21:30 GMT
கோவை, 


இணையதள இணைப்பு கட்டணத்தை அரசு வழங்க வேண்டும், பணியிட மாறுதலை உடனே நடத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கிராம நிர்வாக அலுவலர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு வழங்கிய மடிக்கணினிகளை மீண்டும் அரசிடம் திரும்ப ஒப்படைத்தனர்.

இந்த நிலையில் நேற்று முதல் சாதி சான்றிதழ், இருப்பிட சான்றிதழ், சிறு, குறு விவசாயிகள் சான்றிதழ், வாரிசு சான்றிதழ் உள்ளிட்ட 24 வகையான சான்றிதழ்களை வழங்கும் ஆன்லைன் பணிகளை புறக்கணிக்கும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் பொதுமக்களுக்கு மேற்கண்ட சான்றிதழ்கள் வழங்கும் பணி பாதிக்கப்பட்டு உள்ளது.

இதுகுறித்து கிராம நிர்வாக அலுவலர் சங்க கோவை மாவட்ட செயலாளர் சரவணன் கூறியதாவது:-

தமிழக அரசு சாதி சான்றிதழ் உள்பட 24 வகையான சான்றிதழ்கள் வழங்கும் பணியினை ஆன்லைன் செய்து உள்ளது. இதற்காக மாநிலம் முழுவதும் இ-சேவை மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. எனவே பொதுமக்கள் தங்களுக்கு தேவையான சான்றிதழ்களை பெற இணையதளம் வழியாகவே விண்ணப்பிக்க முடியும்.

இந்த விண்ணப்பங்களை கிராம நிர்வாக அலுவலர்கள் இணையதளத்தில் சரிபார்க்க வேண்டும். இதற்காக மாநில அரசு எங்களுக்கு மடிக்கணினி வழங்கி உள்ளது. ஆனால் இதற்கான இணையதள இணைப்பு கட்டணத்தை அரசு வழங்குவது இல்லை. இதனால் கிராம நிர்வாக அலுவலர்களுக்கு மாதந்தோறும் தலா ரூ.500 முதல் ரூ.800 வரை இணையதள கட்டணத்திற்கு செலவு செய்கின்றனர்.

எனவே இணையதள கட்டணத்தை அரசே செலுத்தக்கோரியும், பணியிடங்களை மறுசீரமைப்பு செய்ய வேண்டும், கிராம நிர்வாக அலுவலர் அலுவலகங்களில் அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க வேண்டும், பணியிட மாறுதல் வழங்க கோரியும் பலமுறை அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால் இதுவரை அரசு இந்த கோரிக்கைகளை நிறைவேற்றவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்