சேலம் ஜங்சன் ரெயில் நிலையத்தில் தண்டவாளத்தில் படுத்து வடமாநில தொழிலாளி தற்கொலை போலீசார் விசாரணை
சேலம் ஜங்சன் ரெயில் நிலையத்தில் தண்டவாளத்தில் படுத்து வடமாநில தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சூரமங்கலம்,
சேலம் ஜங்சன் ரெயில் நிலையத்துக்கு தினமும் 100-க்கும் மேற்பட்ட ரெயில் கள் வந்து செல்கின்றன. இந்த நிலையில் ரெயில் நிலையத்தின் 4-வது பிளாட்பாரத்தில் நேற்று முன்தினம் மாலை சுமார் 46 வயது மதிக்கத்தக்க ஒருவர் நீண்ட நேரமாக அமர்ந்திருந்தார். அப்போது அந்த பிளாட்பாரத்தில் சரக்கு ரெயில் வந்து கொண்டிருந்தது.
பின்னர் அவர் தண்டவாளத்துக்கு சென்று திடீரென படுத்து கொண்டார். இதை பார்த்த அங்கிருந்த பயணிகள் கூச்சலிட்டு அலறினர். ஆனால் சரக்கு ரெயில் அவர் மீது ஏறியதில் உடல் துண்டாகி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தகவல் கிடைத்ததும் சேலம் ரெயில்வே போலீசார் அங்கு விரைந்து சென்றனர்.
இதையடுத்து அவரின் உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தண்டவாளத்தில் படுத்து தற்கொலை செய்து கொண்டவரின் அருகே ஒரு பை கிடந்தது. அதில் வாக்காளர் அடையாள அட்டை மற்றும் ஒரு செல்போன் இருந்தது.
அதனை வைத்து போலீசார் விசாரித்ததில் தற்கொலை செய்து கொண்டவர் மேற்கு வங்காள மாநிலம் கரீம்பூரை சேர்ந்த நாராயணன்(வயது 46) என்பதும், கேரளாவில் கூலி வேலை பார்த்து வந்ததும் தெரியவந்தது. மேலும் அவர் எதற்காக தற்கொலை செய்து கொண்டார்? என்பது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.